மீண்டும் காமெடியனாகவா? நிருபர் கேட்ட கேள்விக்கு தரமான ரிப்ளை கொடுத்த சூரி
கதையின் நாயகனாக சூரி நடித்து சமீபத்தில் வெளியாகி தமிழகமெங்கும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் மாமன். இதில் அவருக்கு இணையாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து உள்ளார். மேலும் ராஜ்கிரண், ஸ்வாசிகா, கீதா கைலாசம், விஜி, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் இதில் நடித்து உள்ளனர். படத்தை பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கி உள்ளார். விலங்கு வெப் சீரிஸ் மூலம் அறியப்பட்ட இவர், ஜி.வி. பிரகாஷை வைத்து புருஸ்லீ படத்தை கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப உறவுகளின் நெருக்கம் மெல்ல மெல்ல மறைந்து வரும் இந்த கால கட்டத்தில் அதன் தேவைகளையும், அவசியத்தையும் பேசும் இந்த படத்தின் கதையை சூரியே எழுதி இருக்கிறார்.
மலையாள, தெலுங்கு படங்களுக்கு இசை அமைத்துள்ள ஹேஷம் அப்துல் வஹாப் இந்த படத்தின் மூலம் தமிழுக்கு வந்து இருக்கிறார். திரையரங்குகளில் இந்த படத்துக்கான வரவேற்பு எப்படி என்பதை அறிந்து கொள்ளவும், படத்தை இன்னும் பிரபல படுத்தும் நோக்குடனும் தமிழகம் முழுவதும் நடிகர் சூரி மற்றும் படக்குழுவினர் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களிடமும் செய்தியாளர்களிடமும் பேசி வருகின்றனர். அந்த வகையில் திண்டுகல்லில் உள்ள தியேட்டருக்கு சென்ற நடிகர் சூரி, அங்கு பத்திரிகையாளர்களிடம் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அப்போது பேசிய அவர், ஏ.பி.சி. என்று எந்த பாகுபாடும் இல்லாமல் எல்லா சென்டர்களிலும் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு இருப்பதாகவும், குடும்பம் குடும்பமாக வந்து படத்தை பார்த்து செல்வதாகவும் கூறியுள்ளார், தங்கள் குடும்பத்தில் இதுபோன்று நடந்து உள்ளதாகவும், தங்களுக்கு கூட இது போல் நடைபெற்று இருப்பதாகவும் என்னிடம் சொல்கிறார்கள். பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் கூட, அக்கா தங்கைகள், சகோதரர்கள் என அனைவருமே பாராட்டுகிறார்கள். இதனை இங்கு வந்து இருக்கும் பத்திரிகை, டி.வி., யூடியூப் நண்பர்களாகிய நீங்களே காண முடிகிறது. குடும்ப உறவுகளை மையமாக வைத்து எத்தனை படங்கள் வந்தாலும் அதை ஆதரிக்க மக்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் எங்குமே இல்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது.
படம் பார்த்து விட்டு வெளியே வருவோர் பேச முடியாமல் தவிக்கிறார்கள். பலர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டு செல்வதை காண முடிகிறது. இதுபோன்ற படங்களை நீங்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கோரிக்கை வைக்கிறார்கள். இதுபோன்ற குடும்பம் சார்ந்த படங்களில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அதுபோல் குடும்பம் சார்ந்து வெளிவரும் நிறைய படங்கள் வெற்றி பெற்று வருவதையும் பார்க்கிறோம். இந்த படத்தை மிகப்பெரிய வெற்றி படமாக்கிய தாய்மார்களுக்கு மிகப்பெரும் நன்றி. பல்வேறு தியேட்டர் உரிமையாளர்களிடம் நான் பேசும்போது, அவர்கள் எங்கள் பகுதிக்கு வந்து படத்துக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து செல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டு உள்ளனர்.
அவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் மற்றும் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை மூன்று படங்களில் கதாநாயகனாக நடித்து உள்ளீர்கள், தொடர்ந்து ஹீரோவாக நடிக்க இருக்கிறீர்களா? அல்லது காமெடிக்கு திரும்பும் எண்ணம் இருக்கிறதா? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்கையில், நான் என்னவாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். காமெடியனாக வெற்றி பெற்றதற்கும் அவர்கள் தான் காரணம். இப்போது கதையின் நாயகனாக இருப்பதற்கும் அவர்கள் தான் காரணம். எனவே அவர்கள் விரும்பியபடி செயல்படுவதுதான் என் விருப்பம் என்றும், கதையின் நாயகனாக தொடர்ந்து நடிப்பேன் என்றும் கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் அளித்துள்ள பேட்டியிலும், மீண்டும் நகைச்சுவை நடிகராக திரும்பும் எண்ணம் இல்லை என்று கூறி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.