ஷங்கருக்கு செக் வைத்த லைக்கா!. தமிழ்நாட்டில் வெளியாகுமா கேம் சேஞ்சர்?!..
Game Changer: ஜென்டில்மேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் ஷங்கர். முதல் படமே அதிக பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுத்ததால் அடுத்தடுத்த படங்களையும் அப்படியே எடுத்து பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்தார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இயக்குனராகவும் இவர் மாறினார்.
பாடல்களுக்கு அதிக செலவு: இந்தியன், அந்நியன், எந்திரன், 2.0, ஐ என பல திரைப்படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார். இவரின் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுவார்கள். தனது படங்களில் பாடல்களை அதிக செலவு செய்து ரிச்சாக எடுப்பது ஷங்கரின் வழக்கம். ரசிகர்களுகு கண்டிப்பாக அது விருந்தாக அமையும்.
இந்தியன் 2: ஷங்கரின் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படம் சரியாக போகவில்லை. எனவே, ராம்சரணை வைத்து இயக்கியுள்ள கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் பெரிதும் நம்பியிருக்கிறார். இந்த படத்தில் 5 பாடல் காசிகளுக்கு 75 கோடி செலவு செய்துள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே தெரிவித்திருக்கிறார்.
இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி சமீபத்தில் வெளியிட்டார். இந்த படம் பொங்கலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. ஆனால், இந்த படத்திற்கு லைக்கா நிறுவனம் பிரச்சனையை கொண்டு வந்திருக்கிறது.
இந்தியன் 3-க்கு வந்த சிக்கல்: லைக்கா நிறுவனம் இப்போது நிதி நெருக்கடியில் இருக்கிறது. இந்த படம் தயாரித்த இந்தியன் 2, லால் சலாம், வேட்டையன் ஆகிய படங்களால் இந்நிறுவனத்துக்கு பல கோடிகள் நஷ்டம். இந்த பிரச்சனையால்தான் லைக்கா நிறுவனம் தயாரித்த விடாமுயற்சி படமே ரிலீஸ் ஆகாமல் நிற்கிறது.இந்தியன் 2 தோல்வி என்பதால் இந்தியன் 3 படத்தை ஷங்கர் உடனடியாக முடித்து கொடுக்க வேண்டும் என லைக்கா விரும்புகிறது. அந்த படத்தின் பல காட்சிகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டாலும் இந்தியன் 2 ஓடவில்லை என்பதால் பல காட்சிகளை மாற்றியெடுக்க ஷங்கர் திட்டமிட்டிருக்கிறார். இதற்கு 65 கோடியை அவர் சம்பளமாக கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கு லைக்கா சம்மதிக்கவில்லை என சொல்லப்படுகிறது.
கேம் சேஞ்சருக்கு ரெட் கார்டு:
இந்நிலையில்தான், இந்தியன் 3 படத்தை முடிக்காமல் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என திரைத்துறை கூட்டமைப்பிடம் லைக்கா நிறுவனம் புகார் அளித்துள்ளது. 4 நாட்களாக இது தொடர்பான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாத நிலையில் தமிழ்நாட்டில் கேம் சேஞ்சர் படத்திற்கான திரையரங்க ஒப்பந்தம் இன்னும் துவங்கப்படவில்லை. விரைவில் இது தொடர்பான பிரச்சனையில் தீர்வு எட்டப்படும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.