இத்தனை நல்லவருன்னா அஜித் இத செய்திருக்கலாமே? இது சுயநலம் இல்லையா?
ajith
தான் தனிப்பட்ட விஷயங்களுக்கு அறிக்கை விடும் நடிகர் அஜித், தான் நடிக்கும் படங்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது மவுனம் காப்பது சரியல்ல என்றும் அதுபற்றிய தனது நிலைப்பாட்டை அவர் தெரிவிக்க வேண்டும் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு வலியுறுத்தி உள்ளார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா கிருஷ்ணன், பிரபு, பிரசன்னா, அர்ஜூன் தாஸ், சுனில் வர்மா, யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் குட் பேட் அக்லி. இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார். கடந்த ஏப்ரல் மாதம் வெளியான இந்த படம் அஜித் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன், உலகளவில் வசூல் வேட்டை நடத்தியதாகவும் கூறப்பட்டது.
இந்த படத்தில் இளையராஜாவின் இசையில் உருவான ஒத்த ரூபா தாரேன்…. இளமை இதோ இதோ பாடல்களை தனது அனுமதி பெறாமல் பயன்படுத்தி இருப்பதாகவும், தனக்கு ஐந்து கோடி ரூபாய் தரவேண்டும் என்றும் இளையராஜா நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு விழாவில் இது தொடர்பாக பேசிய இளையராஜாவின் தம்பி கங்கை அமரன், ஏழு கோடி ரூபாய் கொடுத்து ஒரு இசை அமைப்பாளரை புக் பண்ணினாலும், படம் ஓட வேண்டுமானால் எங்கள் இசைதானே தேவைப்படுகிறது. எங்களுக்கு தேவை பணம் அல்ல, அங்கீகாரம்தான். எங்களிடம் கேட்டு இருந்தால் இலவசமாகவே கொடுத்து இருப்போம் என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தயாரிப்பாளர் பி.எல். தேனப்பன் ஒரு விழாவில் பேசுகையில், இளையராஜா கேட்பது தவறானது என்றும், அந்த பட குழுவினர் இவர் எந்த இசை நிறுவனத்திடம் விற்றாரோ அவர்களிடம் உரிமம் வாங்கி இருக்கிறார்கள். இதில் தவறு இல்லை. இளையராஜா மற்றொருவர் இசையை காப்பி அடித்தது இல்லையா? பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் இடம்பெற்ற தக...தகவென ஆடவா என்ற பாடல் யாருடையது? எம்.எஸ். விஸ்வநாதன் இசை அமைத்த பாடல்தானே அது. அவர் வந்து இவர்களிடம் வந்து பணம் கேட்டாரா? என்று சாடி இருந்தார்.
இந்த நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் அஜித் விளக்கம் அளித்து இருக்க வேண்டும் என்று திரைப்பட விமர்சகர் செய்யாறு பாலு கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலை தல பக்கத்தில், நடிகர் அஜித் வரும் நவம்பர் மாதம் வரை கார் பந்தயத்தில் ஈடு பட போவதாகவும் அதுவரை தான் சினிமாவில் நடிக்க போவது இல்லை என்றும் தான் கார் ரேசில் பங்கேற்பதற்காகவே உடல் எடையை குறைத்து இருப்பதாகவும் அறிக்கை வாயிலாக தகவல் வெளியிட்டுள்ளார். தான் சாம்பந்தப்பட்ட எல்லாவற்றுக்கும் அவர் மூலமோ, அல்லது அவரது நிர்வாகிகள் மூலமோ கருத்து சொல்லும் நடிகர் அஜித், தனது படமான குட் பேட் அக்லி, பாடல் பயன்படுத்தப் பட்ட விவகாரத்திலும் தனது கருத்தை தெரிவித்து இருக்க வேண்டும்.
இந்த இடத்தில் நான் அஜித் பற்றி ஒன்றை சொல்லியாக வேண்டும். நடிகர் விதார்த்திடம் பேசிக் கொண்டு இருக்கையில், அஜித்தின் வீரம் படத்தில் ஒரு கதாபாத்திரத்துக்கு, விதார்த்தை போடுங்க என்று அஜித் சொல்லி இருக்கிறார். நான் அப்போது மீரா கதிரவன் படத்தில் நடித்து கொண்டு இருக்கிறேன் என்று சொல்லியவுடன், அவரே நேரே மீரா கதிரவனிடம் பேசி அந்த கால்ஷீட்டை வாங்கி என்னை அவருடன் நடிக்க வைத்தார். அந்த படத்துக்காக நான் அவரோடு 107 நாட்கள் டிராவல் பண்ணி இருக்கிறேன். ஒருவரால் இரண்டு மூன்று நாட்கள்தான் நல்லவனாக நடிக்க முடியும். அத்தனை நாட்களும் நல்லவனாக நடிக்க முடியாது. உண்மை வெளிப்பட்டு விடும். அந்தளவுக்கு அஜித் நல்ல மனிதர் என்று அவர் என்னிடம் தெரிவித்து இருந்தார்.
ajith
இந்தளவுக்கு நல்லவராக இருக்கும் அஜித், தனது பிரச்சினைகளுக்காக மட்டும் தான் தானாகவோ, அல்லது தனது நிர்வாகிகள் மூலமாகவோ பேசுவாரா? அல்லது அவருக்கு இந்த தகவல்கள் எல்லாம் போகாமல் அவருடன் இருப்பவர்களால் பில்டப் செய்யப்படுகிறதா? வரும் காலங்களில் இதுபோன்ற நேரங்களில் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அதேபோல் இந்த விவகாரத்தில் அந்த பாடலை எழுதிய இயக்குனர் கஸ்தூரி ராஜாவும், தான் அந்த பாடலை உருவாக்க எவ்வளவு கஷ்டப் பட்டேன் என்று தெரியுமா? என்னிடம் ஒரு தகவல் தெரிவித்து இருக்கலாம். எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து இருக்கலாம் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். அந்த பாடல் இடம்பெற்ற எட்டுப்பட்டி ராசா படத்தின் தயாரிப்பாளரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.