கடவுளே நடிச்சாலும் படம் ஓடாது!. குரங்கு நடிச்சா கூட ஓடும்!. போட்டு தாக்கும் விஜய் ஆண்டனி!...
Vijay Antony: ஒரு திரைப்படம் எதனால் ஓடும் என சொல்ல முடியாது. அதேபோல், படம் எடுக்கும்போதே இது வெற்றி பெறுமா? தோல்வி அடையுமா? என்பதையும் யாராலும் கணிக்க முடியாது. சில நூறு கோடிகள் செலவு செய்து பெரிய நடிகரை போட்டு படமெடுத்தாலும் அது வெற்றி பெறும் என சொல்ல முடியாது. ஒரு திரைப்படம் வெற்றி பெறுவது மேஜிக் போல நிகழும்.
அதற்கு பெரிய நடிகர்கள், பெரிய பட்ஜெட்டெல்லாம் இருக்க வேண்டும் என்கிற அவசியமே இல்லை. எந்த புரமோஷனுமே செய்யாமல் சின்ன நடிகர்கள் நடித்து வெறும் 15 கோடியில் எடுக்கப்பட்ட டூரிஸ்ட் ஃபேமிலி படம் சூப்பர் ஹிட் அடித்து 65 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. ஒருபக்கம் மணிரத்னம் - கமல் நடித்து 150 கோடி செலவு செய்து பல நாட்கள் புரமோஷன் செய்யப்பட்டு வெளியான தக் லைப் படம் ஓடவில்லை.
பல மொழிகள், அதிக பட்ஜெட், 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என புரமோஷனில் அதிகம் பேசிய கங்குவா படம் பாக்ஸ் ஆபிசில் மண்ணை கவ்வியது. இந்நிலையில்தான் படங்களில் வெற்றி தோல்வி பற்றிய ஒரு புது தத்துவத்தை சொல்லியிருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் இவர்.
சினிமாவில் நடிக்க துவங்கிய முதலே தொடர் ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும், பிச்சைக்காரன் இவரை முன்னணி நடிகராக மாற்றியது. அதன்பின் அவரின் படங்கள் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி வருகிறது. சமீபத்தில் கூட இவரின் மார்கன் படம் வெளியானது. படம் வெளியாகி 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இப்படம் இதுவரை 6 கோடியை மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய விஜய் ஆண்டனி ‘ கடவுளே வந்து ஹீரோவாக நடித்தாலும் இயக்குனரின் எழுத்தும், இயக்கமும் சரியாக அமையாவிட்டால் படம் ஓடாது. அதேநேரம் இயக்குனரின் எழுத்தும், இயக்கமும் சரியாக அமைந்து அதில் குரங்கு, கழுதை நடித்தாலும் படம் ஹிட் அடிக்கும்’ என சொல்லியிருக்கிறார்.