என்னது விஜய் கட்சி மாநாட்டுல மாம்பழம் தரப்போறாங்களா...? வைரலாகி வரும் மாநாட்டுப் போஸ்டர்...!
விஜய் கட்சி போஸ்டரில் பிழை... வைரலாகி வரும் படம்
தளபதி விஜய்க்கு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்தே பிரச்சனை மேல் பிரச்சனை தான். ஆரம்பத்தில் அவரது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று தான் பெயர் வைத்து இருந்தார்கள். 'க்' கை விட்டுட்டீங்களேன்னு பல தரப்பினரும் சொல்ல அதன்பிறகு 'க்' கை சேர்த்து விட்டார்கள்.
இப்போது காரைக்குடியில் விஜய் கட்சி மாநாடு சார்பாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இந்தப் போஸ்டரில் மாபெறும் மாநில மாநாடு என்று போடப்பட்டுள்ளது. இது எத்தகைய தவறு என்பதை கதிரவன் என்ற ஆசிரியர் சுட்டிக் காட்டியுள்ளார். அதாவது 'மா' என்றால் விலங்கு. 'மா' என்றால் பெரிய. 'மா' என்றால் மாம்பழம் என்று 3 அர்த்தங்கள் வருகிறது.
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டு போஸ்டர்களில் மாபெறும் மாநில மாநாடு என்று போடப்பட்டு இருக்கிறது. 'மா' என்பது ஓரெழுத்து ஒரு மொழி. 'மா' என்றால் விலங்கு. பெரிய, மாம்பழம் என்றெல்லாம் பொருள் இருக்கிறது. 'மா' என்றாலே மாம்பழம் என்கிற பொருள் வருகிறது.
போஸ்டரில், 'மாபெறும்' என்று வல்லின றகர 'று' போட்டு இருக்கிறார்கள். அப்படி என்றால் 'மாம்பழம் பெறக்கூடிய மாநில மாநாடு' என்கிற பொருளைக் குறிக்கும். 'விலங்கு பெறக்கூடிய மாநில மாநாடு' என்கிற பொருளைக் குறிக்கும். 'மாபெரும்' என்று இடையின ரகர 'ரு' போட வேண்டும் என்று அந்த ஆசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதை எல்லாம் பார்க்கும்போது 'சோதனை மேல் சோதனை போதுமடா சாமி' என்ற பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது. விஜய் ஸ்டைலில் இந்தப் பாட்டு என்றால் 'மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்' என்று ரசிகர்கள் பாடிக் கொண்டாடலாம்.
மற்ற கட்சிகளுக்கு ரோல்மாடலாக இருக்கும் எங்கள் கட்சியின் மாநாடு என்றெல்லாம் விஜய் முழக்கமிட்டாரே... இதுக்குத் தானா இவ்வளவு பில்டப்பு என்பது போல் போஸ்டரில் பிழை வைரலாகி விட்டதே... என்று சொல்ல வைத்துள்ளனர் அவரது கட்சியினர்.எது எப்படியோ ஆனது ஆகட்டும். போனது போகட்டும்... விஜய் நினைத்தபடி மாநாடு வெற்றிகரமாக நடந்தால் சரிதான்..!