முன்னணி நடிகர்களின் படங்கள் பிளாப் ஆகுதே... ஆங்கருக்கு சாட்டையடி பதில் கொடுத்த பிரபலம்
கன்டன்ட் தான் முக்கியம்னு எல்லாருக்கும் தெரியும். அப்படி தெரிந்தும் முன்னணி நடிகர்களோட படங்கள் படுதோல்வி அடைய என்ன காரணம்னு யூடியூப் சேனல் ஒன்றில் ஆங்கர் பிரபல விநியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியத்திடம் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் என்ன பதில் சொல்கிறார்னு பார்க்கலாமா...
முன்னணி நடிகர்கள் மக்கள் ரசிப்பாங்கன்னு நினைச்சித்தான் படம் எடுக்கிறாங்க. அது மக்களுக்குப் பிடிக்கிறது இல்ல. இது அவங்க தவறுன்னு சொல்ல முடியாது. ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ரசனை இருக்கும் என்று பதில் அளித்தார் சுப்பிரமணியம். உடனே அத்தனை ஆண்டுகாலமாக சினிமாவில் இருக்கிறார்கள். மக்கள் எதை ரசிப்பார்கள்னு முன்னணி நட்சத்திரங்களுக்குத் தெரியாதா என கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டார் அந்த ஆங்கர். அதற்கு திருப்பூர் சுப்பிரமணியம் சாட்டையடி பதில் கொடுத்தார். என்னன்னு பாருங்க.
சினிமா தோன்றின காலம் தொட்டு தியாகராஜ பாகவதர் ஹிதாஸ் மாதிரியான சூப்பர்ஹிட் படங்களை எடுத்தார். அதே நேரம் கடைசியாக பவளக்கொடி படத்தையும் கொடுத்தார். அது தோல்வி. அப்போ அந்தக் காலத்துல இருந்தே தெரியாமலா எடுக்குறாங்க? இப்படி ஒவ்வொருத்தரையும் உதாரணமா சொல்லலாம்.
எம்ஜிஆர் கதை தேர்வுல ரொம்ப கெட்டிக்காரர். ஆனா அவரே பீக்ல இருந்த காலகட்டத்துல நீரும் நெருப்பும், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என தோல்விப்படங்களைக் கொடுத்தார். அதே மாதிரி தான் சிவாஜி பீக்ல இருக்கும்போது தர்மம் எங்கே?, சித்ரா பௌர்ணமி மாதிரியான படங்கள்ல நடிச்சாரு.
Thirupur Subramaniyam
அப்படின்னா அவருக்குக் கதை தேர்வு சரியில்லன்னு அர்த்தமா? ரஜினி கூட ராகவேந்திரா படம் எடுத்தாரு. சுத்தமா போகல. கோச்சடையான், வேட்டையன் போகல. விஜய்க்கு பைரவா போகல. அஜித்துக்கு கிரீடம் போகல. இப்படி நிறைய சொல்லலாம்.
கதாநாயகர்கள் மட்டுமல்ல. டைரக்டர், தயாரிப்பாளரும் கதை தேர்வை முடிவு பண்றாங்க. இப்ப சமீபகாலமாகத் தான் கதாநாயகர்கள் கதை தேர்வு செய்றாங்க என்று சொல்கிறார். மீண்டும் மீண்டும் அந்த ஆங்கர் இந்தக் கதையை மக்கள் ஏத்துப்பாங்கன்னு படம் எடுக்குறவங்களுக்குத் தெரியாதான்னு கேட்கிறார்.
அதைத்தானே சொல்றேன். காலம் காலமாக இப்படித்தான் நடக்குது. தெரிஞ்சா யாராவது எடுப்பாங்களா? மதகஜராஜாவை யாருமே நம்பல. ஆனா 12 வருஷம் கழிச்சி ஹிட்டாகலயா? பொற்காலம், காதல் கோட்டை ஜெயிக்கும்னு நானே எதிர்பார்க்கல. அதனால மக்களோட ரசனையைப் புரிஞ்சி எடுக்க முடியாதுன்னு பதிலடி கொடுத்தார் திருப்பூர் சுப்பிரமணியம்.