போதையில ஒருத்தர் கேட்ட கேள்வி!.. ஏ.ஆர்.ரஹ்மானின் வாழ்க்கையே மாறிப்போச்சே!...
AR Rahman: ரோஜா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மாறியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவரின் அப்பா சேகர் மலையாள திரையுலகில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அப்பா இசையமைப்பாளர் என்பதால் சிறு வயது முதலே இசையை கற்றுக்கொண்டார் ரஹ்மான்.
திடீரென அப்பா இறந்துவிடவே சிறு வயதிலேயே குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய நிலை ரஹ்மானுக்கு வந்தது. எனவே, இளையராஜா உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பல திரைப்படங்களிலும் இசைக் கலைஞராக வேலை பார்த்துள்ளார். ஒருகட்டத்தில் தனியாக இசையமைக்க துவங்கினார்.
முதலில் இவர் இசையமைத்தது விளம்பர படங்களுக்குதான். ரோஜா படத்தில் இவர் கொடுத்த இசை இவருக்கு தேசிய விருதை பெற்று தந்தது. அப்போது தேசிய விருது பட்டியலில் இளையராஜாவும் இருந்தார். பாலுமகேந்திரா போட்ட ஒரு ஓட்டு ரஹ்மானுக்கு தேசியவிருதை உறுதி செய்தது.
பெரும்பாலும் மெலடிகளை மட்டுமே கேட்டுக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மேற்கத்தியை இசையை கொடுத்து அதிர வைத்து ஆட்டம் போட வைத்தார் ரஹ்மான். குறிப்பாக அவரின் இசை இளசுகளுக்கு மிகவும் பிடித்துப்போனது. தொடர்ந்து ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், இந்தியன், திருடா திருடா என அடித்து ஆடினார் ரஹ்மான்.
தமிழ் மட்டுமின்றி ஹிந்திக்கும் சென்று கொடி நாட்டினார். ரங்கீலா படத்துக்காக ரஹ்மான் போட்ட இசைக்கு நடனம் அமைக்க முடியாமல் பாலிவுட் நடன இயக்குனர்கள் திணறினார்கள். ஸ்லம்டாக் மில்லினியர் படத்துக்காக 2 தேசிய விருதுகளை பெற்றார் ரஹ்மான். விருதை கையில் வாங்கிக்கொண்டு ‘எல்லாப் புகழுக்கும் இறைவனுக்கே’ என சொன்னார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய ரஹ்மான் ‘எனக்கு 19 வயது இருக்கும்போது இரண்டு இசையமைப்பாளர்களுடன் ஒரு குழுவில் வேலை செய்தேன். அந்த குழுவில் இருந்த ஒரு கிதார் கலைஞர் ஒருநாள் குடிபோதையில் என்னிடம் ‘ஏன் சினிமா இசையை மட்டுமே வாசிக்கிறாய்.. உனக்கு வேறு எதுவும் தெரியாதா?’ எனக்கேட்டார். அதன்பின்னரே எனது தனித்துவமான இசையை அடையாளம் காணும் பயணம் துவங்கியது’ என சொல்லி இருக்கிறார்.