சீரியஸாக சண்டை போட்ட எம்ஜிஆரை சிரிக்க வைத்த பானுமதி... அடடே வில்லனும் சிரிச்சிட்டாரே..!

By :  Sankaran
Update: 2025-01-08 03:30 GMT

தமிழ்த்திரை உலகில் பானுமதயைத் தைரியமான நடிகை என்பார்கள். இவர் எம்ஜிஆருடன் இணைந்து நடித்த பல படங்கள் சூப்பர்ஹிட் ஆனவை. மலைக்கள்ளன், கலை அரசி, மதுரை வீரன், தாய்க்குப் பின் தாரம் ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளார். எம்ஜிஆருடன் பழகிய நாட்களை இவருக்கு எப்படி இருந்ததுன்னு அவரே சொல்கிறார். பார்க்கலாமா...

மிஸ்டர் ராமச்சந்திரன் என்று எம்ஜிஆரை அழைக்கக்கூடிய வகையில் உரிமை பெற்றவர் என்றால் தமிழ்சினிமா உலகிலே அது பானுமதி மட்டும்தான். பல திரைப்படங்களில் எம்ஜிஆருடன் இணைந்து நடித்துள்ளார். இவர் எம்ஜிஆரைப் பற்றிய பல நினைவுகளை ஒரு பத்திரிகை பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

பல கதாநாயகர்களோடு நான் நடித்து இருந்தாலும் என்னால் மறக்க முடியாதவர்னா அது எம்ஜிஆர் மட்டும்தான். அவர் செட்டுக்குள்ள வந்தாலே அங்கு பரபரப்புத் தொற்றிக் கொள்ளும். இத்தனைக்கும் அவர் ஒரு பரம சாது. அவர்கூட வருபவர்கள்தான் அத்தனை ஆட்டமும் போடுவாங்க.

என் மேல எப்பவுமே எம்ஜிஆருக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. ஒரு திரைப்படத்திலே நம்பியாரிடம் இருந்து என்னைக் காப்பாற்றுவதற்காகக் கத்திச்சண்டை போடுவது மாதிரி ஒரு காட்சி. நம்பியாரும், எம்ஜிஆரும் கத்திச்சண்டை போடுவாங்க. நான் அதைப் பார்த்துப் பயந்து நடுங்கிக் கொண்டே இருப்பேன்.


இவங்க ரெண்டு பேரும் சண்டை போடுறாங்க. போட்டுக்கிட்டே இருக்காங்க. அந்தக் காட்சி முடிந்தபாடாக இல்லை. நான் எத்தனை முறைதான் எந்த வசனமும் பேசாம நடுங்கிக் கொண்டே இருப்பது. அதனால நேரா எம்ஜிஆருக்கிட்ட போனேன். 'நீங்களும்தான் எவ்வளவு நேரமா சண்டை போடுவீங்க. உங்களால என்னைக் காப்பாற்ற முடியலன்னா விட்டுருங்க.

நானே கத்திச்சண்டை போட்டு என்னை நம்பியாருக்கிட்ட இருந்து காப்பாத்திக்கறேன்'னு சொன்னேன். உடனே வெள்ளிக்காசு சிதறியது போல எம்ஜிஆரும், நம்பியாரும் சிரிக்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னுடைய வாழ்க்கையிலயே எம்ஜிஆர் மனம் விட்டு சிரித்ததை அன்றைக்குத் தான் நான் பார்த்தேன் என்று பத்திரிகை பேட்டி ஒன்றில் பானுமதி தெரிவித்துள்ளார்.

நாடோடி மன்னன், கலை அரசி ஆகிய படங்களில் எம்ஜிஆர், நம்பியார், பானுமதி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News