ரஜினிக்குப் பிடித்த கிளைமாக்ஸ்... நோ சொன்ன தயாரிப்பாளர்... படமோ சூப்பர்ஹிட்!
தமிழ்த்திரை உலகில் எம்ஜிஆர், சிவாஜிக்குப் பிறகு இருபெரும் ஜாம்பவான்கள் என்றால் ரஜினி, கமல் தான். இருவருக்கும் சூப்பர்ஹிட் கொடுத்தது ஏவிஎம் படங்கள். எஸ்.பி.முத்துராமன் இயக்கியவை. அப்படி ஒரு ரஜினி படம் தான் நல்லவனுக்கு நல்லவன். இந்தப் படத்தில் விசேஷம் என்னவென்றால் 2 கிளைமாக்ஸ் எடுக்கப்பட்டது. அது என்ன விவரம்னு பார்ப்போம்.
1984ல் வெளியான சூப்பர்ஹிட் ரஜினி படம் நல்லவனுக்கு நல்லவன். ஏவிஎம் தயாரித்த இந்தப் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினி, கார்த்திக், ராதிகா உள்பட பலர் நடித்துள்ளனர். கதை வசனம் எழுதியவர் விசு.
இந்தப் படமானது தர்மாத்மூடு என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்தான். முதலில் அந்த தெலுங்கு படம் ஓடவில்லை. அதனால் அதை ஏன் நாம் எடுக்கணும்னு பிரபல இயக்குனர் பஞ்சு அருணாசலம் கேட்டார். அதற்கு ஏவிஎம்.சரவணன் மற்றும் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் இருவரும் இந்தப் படத்தில் வெற்றிக்கான ஒரு விஷயம் இருக்கு.
ஆனா அது என்னன்னு பிடிபடல என்றனர். அதனால் விசுவிடம் இந்தப் படத்தைப் போட்டுக் காட்டினார் தயாரிப்பாளர் சரவணன். அவரோ ரொம்ப நல்லா பண்ணலாம் சார். கொஞ்சம் கொஞ்சம் அங்கங்கே மாற்றங்கள் செஞ்சா போதும்னு சொன்னார்.
படம் முடிந்ததும் கிளைமாக்ஸ் காட்சி ரொம்பவே சாஃப்டா இருந்தது. மசாலா படத்துக்கு இது எடுபடாது. ஆக்ஷன் தான் சரின்னு தயாரிப்பாளர் சரவணன் சொன்னார். ஆனால் ரஜினிக்கும், எஸ்.பி.முத்துராமனுக்கும் அந்தக் கவிதைமயமான கிளைமாக்ஸ் தான் பிடிச்சிருந்ததாம்.
ஆனால் தயாரிப்பாளர் விடாப்பிடியாகக் கிளைமாக்ஸை மாற்றச் சொன்னார். மீண்டும் படமாக்கப்பட்டது. அப்படி மாற்றியதுதான் நாம் திரையில் பார்ப்பது. சென்சாருக்குப் போயிட்டு வந்த படத்தை ரஜினியும், முத்துராமனும் பார்த்தனர். சூப்பராக இருக்கேன்னு ஆச்சரியப்பட்டனர்.
படமும் மாஸ் ஹிட் ஆனது. இசைஞானி இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். சிட்டுக்கு, வச்சிக்கவா, உன்னைத்தானே, நம்ம முதலாளி, முத்தாடுதே ஆகிய பாடல்கள் உள்ளன.