கண்ணதாசனின் ஒளிமயமான வாழ்க்கைக்குக் காரணம் யாருன்னு தெரியுமா? அட அவரா..!
தமிழ்த்திரை உலகில் கவியரசர் என்று போற்றப்படுபவர் கண்ணதாசன். இவர் காலத்தால் அழியாத பல பாடல்களைக் கொடுத்துள்ளார். எம்ஜிஆர், சிவாஜிக்கு பல காதல் மற்றும் தத்துவப்பாடல்களையும் கொடுத்தவர் தான் கண்ணதாசன். இவர் கடைசியாக எழுதிய பாடல் கமல் நடித்த மூன்றாம்பிறை படத்தில் வரும் கண்ணே கலைமானே பாடல்.
கவியரசர் என்று சொல்லக்கூடிய அளவில் இவரது பாடல்கள் இன்றும் நிலைத்து நிற்கின்றன. கண்ணதாசனுக்கு அடுத்த படியாக தமிழ்த்திரையுலகில் பல சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் கவிஞர் வாலி. இவரை 'வாலிபக்கவிஞர்' என்றும் சொல்வார்கள்.
கண்ணதாசனே தனது அடுத்த வாரிசு இவர்தான் என்று ஒரு கட்டத்தில் பேசியதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில் கண்ணதாசன் இந்த அளவு புகழ்பெறக் காரணமாக இருந்தது அவரது முதல் பாடல் தான். அவருக்கு பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்தவர் யார்? அவரைப் பற்றி கண்ணதாசன் என்னவெல்லாம் சொல்லி இருக்கிறார் என்று பார்க்கலாம்.
கன்னியின் காதலி என்ற திரைப்படம்தான் கவிஞர் கண்ணதாசன் பாட்டு எழுதிய முதல் படம். அப்படிப்பட்ட வாய்ப்பை அவருக்கு முதலில் வழங்கியவர் அந்தப் படத்தின் இயக்குனர் கே.ராமநாத். அவர்தான் என் வாழ்வின் உயர்வுக்கும் காரணமாக இருந்தவர்.
இத்தனைக்கும் நான் எழுதிய முதல் பாடல் ஒரு சாதாரணமான வகைதான். இருந்தாலும் அந்தப் பாடலை ஒப்புக்கொண்டதன் மூலம் ஒரு பெருமையைத் தேடித் தந்தார் கே.ராம்நாத். அவர் தந்த உற்சாகத்தின் காரணமாக தொடர்ந்து பல நல்ல பாடல்கள் எழுதக்கூடிய வாய்ப்பு எனக்கு அமைந்தது.
2 நிலைகளில் மனிதன் முன்னுக்கு வருகிறான். ஒன்று திறமை. மற்றொன்று வாய்ப்பு. திறமை இருந்து வாய்ப்பு இல்லாவிட்டாலும், வாய்ப்பு இருந்து திறமை இல்லாவிட்டாலும் மனிதன் பிரகாசிப்பது முயல் கொம்பு கதைதான்.
அந்த முதல் வாய்ப்பை யார் யாருக்கு ஏற்படுத்தித் தருகிறார்களோ அவர்களே கண்கண்ட தெய்வம். என்னைப் பொருத்தவரை தினமும் வணங்க வேண்டியய வணங்கிக் கொண்டு இருக்கிற தெய்வமும் ராம்நாத் ஒருவரே. கோபியில் இருந்த காலகட்டத்தில் அவருடைய வீட்டுக்குப் போய் பல முறை நன்றி தெரிவித்து இருக்கிறேன்.
'நான் என்ன அப்படி பண்ணிட்டேன். நீங்க நல்லா பண்ணிருந்தீங்க. நான் நல்லாருக்குன்னு சொன்னேன். அவ்வளவுதானே' என்று பதில் அளிப்பார் ராம்நாத். என் வாழ்க்கை பிரகாசமாக அமைந்ததற்கு முக்கியமான காரணம் இயக்குனர் ராம்நாத் தான் என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
1949ல் கே.ராம்நாத் இயக்கத்தில் கன்னியின் காதலி என்ற படம் வெளியானது. எஸ்.ஏ.நடராஜன், கே.ஆர்.ராம்சிங், சாரங்கபாணி, அஞ்சலிதேவி, பத்மினி, மாதுரிதேவி, லலிதா உள்பட பலர் நடித்துள்ளனர். சி.ஆர்.சுப்புராமன், எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்துள்ளனர். இந்தப் படத்தில் வரும் கலங்காதிரு மனமே என்ற பாடலைத் தான் கண்ணதாசன் முதல் பாடலாக எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.