இயக்குனருக்கு பயத்தை உண்டாக்கிய செந்தூர பாண்டி பட்டிமன்றம்... லியோனி சொன்ன அசத்தல் தீர்ப்பு!
2023ல் ஆர்.விஜயகுமார் இயக்கத்தில் வெளியான படம் அழகிய கண்ணே. இந்தப் படத்தில் பிரபல பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் திண்டுக்கல் லியோனி கலந்து கொண்டனர். அப்போது லியோனி பேசிய சுவாரசியமான பேச்சிலிருந்து சிலவற்றைப் பார்ப்போம்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ. என்னோட கிளாஸ்மெட். ராசியான மனிதர். இவர்தான் விஜய், விஜயகாந்த் நடித்த செந்தூரப்பாண்டியின் தயாரிப்பாளர். அன்னைக்கு விஜயை ஒரு ஹீரோவாக்கிய பெருமை இவரைத்தான் சேரும்.
இந்தப் படத்தின் 100வது நாள் விழாவை வெகு விமரிசiயாகக் கொண்டாடினார். இந்த விழாவில் என்னோட பட்டிமன்றத்தைக் கொண்டு வந்தாரு. தலைப்பு என்ன தெரியுமா? 'செந்தூரப்பாண்டியின் வெற்றிக்குக் காரணம் காதலா? வீரமா?' காதல்னா விஜய். வீரம் விஜயகாந்த். சிறப்பு விருந்தினர் குஷ்பு.
எல்லா நடிகர், நடிகைகளையும் ஒரே இடத்தில் முதல்முறையாகப் பார்த்தேன். அன்னைக்குக் காலைல விஜய் வீட்டுல டிபன். எஸ்.ஏ.சி.தான் பரிமாறினார். 'என்ன தீர்ப்பு சொல்லப் போறீங்க?'ன்னு கேட்டாரு. 'படம் பார்த்தேன். எது நல்லாருக்கோ, அதைச் சொல்றேன்'னு சொன்னேன். காதலையும் சொல்ல வேண்டாம்.
''வீரத்தையும் சொல்ல வேண்டாம்னு சொன்னாரு. பிறகு எப்படித்தான் தீர்ப்பு சொல்றதுன்னு கேட்டேன். காதல் பண்ணினது என் மகன். வீரம் வந்து விஜயகாந்த். நீங்க காதல்னு தீர்ப்பு சொன்னீங்கன்னா விஜயகாந்த் எனக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இதுல நடிச்சித் தந்தாரு. அவரு கோவிச்சிக்குவாரு.
வீரம்னு தீர்ப்பு சொன்னா என் மகன் முதல்ல ஹீரோவா நடிச்சிருக்கான். அவன் வேதனைப்படுவான். ரெண்டையும் உல்டா பண்ணி ஒரு தீர்ப்பை சொல்லிடுங்க''ன்னாரு. கடைசியில ''காதலும், வீரமும் தமிழர்களின் இரண்டு கண்கள். அதனால்தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காதலும், வீரமும் காரணம்''னு தீர்ப்பை சொன்னேன் என்கிறார் திண்டுக்கல் லியோனி.
1993ல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய படம் செந்தூர பாண்டி. விஜய், விஜயகாந்த், கவுதமி, யுவராணி, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். தேவாவின் இசையில் தெவிட்டாத பாடல்கள் உள்ளன. ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற படம் இது.