எம்.எஸ்.வி பாட்டை வச்சிதான் இந்த பாட்ட போட்டேன்!.. ஓப்பனா சொன்ன இளையராஜா...

By :  Murugan
Update:2025-03-12 08:10 IST

Ilayaraja: இயக்குனர்களின் தேவை அறிந்து பாட்டுக்களை போட்டு கொடுத்தவர் இளையராஜா. கதை என்ன?, எந்த சூழலில் இந்த பாடல் வருகிறது? என்பதை சொல்லிவிட்டால் போதும். அருவி கொட்டுவது போல மெட்டுக்கள் வந்து விழும். சில இயக்குனர்கள் ஏற்கனவே இளையராஜா போட்ட ஒரு பாடலை மேற்கோள் காட்டி இது போல ஒரு பாடல் வேண்டும் என்பார்கள்.

ஆனால், அதே ராகத்தை பயன்படுத்தி வேறு பாடலை போட்டு கொடுப்பார் இளையராஜா. இயக்குனருக்கும் அதில் திருப்தி ஏற்படும். அபூர்வ சகோதரர்கள் படம் உருவானபோது ‘அன்பே வா’ படத்தில் வரும் ‘நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத்தான்’ பாடல் போல எனக்கு ஒரு பாடல் வேண்டும் என கமல் கேட்க ராஜா போட்ட பாட்டுதான் ‘புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா’ பாடல்.

சில சமயம் சிலர் எம்.எஸ்.வி பாடல் ஒன்றை சொல்லி அது போல வேண்டும் என்பார்கள். சிலர் ஹிந்தி பாடலை சொல்லி அது போல வேண்டும் என்பார்கள். கேட்டதை செய்து கொடுத்தார் இளையராஜா. ஆனால், அப்படிப்பட்ட எந்த பாடலையும் இது காப்பி என ரசிகர்கள் கண்டுபிடிக்க முடியாத படி ராஜாவின் தனித்துவம் அதில் இருக்கும்.


மலையாளத்தில் பல சிறந்த திரைப்படங்களை இயக்கியவர் பாசில். விஜயை வைத்து காதலுக்கு மரியாதை படத்தை கொடுத்தவரும் இவர்தான். நதியா அறிமுகமான முதல் மலையாள படத்தை தமிழில் பூவே பூச்சூடவா என்கிற பெயரில் எடுத்தார். பாசில் இளையராஜாவின் தீவிர ரசிகர். எனவே, இந்த படத்திற்கு அவர்தான் இசை என முடிவெடுத்துவிட்டார். ஆனால், ஒருவேளை ராஜா போடும் டியூன் தனக்கு பிடிக்கவில்லை என்றால் அவரிடம் அதை எப்படி சொல்வது என்கிற தயக்கம் அவருக்கு இருந்தது.

ஆனால், பாசில் என்ன எதிர்பார்த்தாரோ அதை விட பல மடங்கு சிறந்த பாடல்களை கொடுத்து நெகிழ வைத்தார். அந்த படத்தில் ராஜா உருவாக்கிய ‘பூவே பூச்சூடவா எந்தன் நெஞ்சில் பால் வார்க்க வா’ ஒரு வயதான பெண் தனது பேத்தி மீது காட்டும் அன்பையும், ஏக்கத்தையும் அப்படியே பிரதிபலித்திருந்தது.

இந்த பாடலை ரெக்கார்ட் செய்து முடித்தவுடன் அங்கிருந்த எல்லோரும் கை தட்டியிருக்கிறார்கள். அப்போது பேசிய இளையராஜா ‘இந்த கைத்தட்டல் எனக்கு சொந்தமில்லை. பாசமலர் படத்தில் எம்.எஸ்.வி அண்ணன் போட்ட மலர்ந்தும் மலராத பாதி மலர் போல ஒரு பாடலை யாராலும் போட முடியாது. நன்றாக கேட்டால் இந்த பாடலில் அந்த பாடலின் சாயல் தெரியும்’ என சொல்லியிருக்கிறார்.

இளைராஜா நினைத்திருந்தால் எம்.எஸ்.வி பெயரை அங்கே சொல்லியிருக்க தேவையில்லை. ஆனால், அவர் அப்படி சொன்னது அவரின் பெருந்தன்மை. இளையராஜா கர்வம் பிடித்தவர் என்று சொல்பவர்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை.

Tags:    

Similar News