முடியாதுன்னு சொன்னேன்!. அதுதான் நியாயம்!.. வேட்டையாடு விளையாடு அனுபவம் சொல்லும் கமல்!..
Kamalhaasan: பாலச்சந்தரின் இயக்கத்தில் நடித்து தன்னை நடிப்பில் மெருகேற்றிக்கொண்டாலும் கமலிடம் நடனத்திறமை எல்லோராலும் ரசிக்கப்பட்டது. 80களில் வெளிவந்த பல படங்களில் கமல் மைக்கை பிடித்துக்கொண்டு நடனமாடும்படி கண்டிப்பாக ஒரு பாடல் இருக்கும். நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட பல படங்களிலும் கமல் இப்படி நடனம் ஆடுவார். பாலச்சந்தரின் புன்னகை மன்னன் படத்திலும் நடன பள்ளியில் மாஸ்டராக வருவார்.
கமல் என்றால் நடிப்பு, முத்தம், நடனம் என அவருக்கு பல அடையாளங்கள் இருக்கிறது. கமல் நடித்து வெளியான கமர்ஷியல் படங்களில் கண்டிப்பாக அவரின் நடன திறமையை காட்டும் பாடல் காட்சி இடம் பெற்றிருக்கும். அவரின் ரசிகர்களும் அதை எதிர்பார்ப்பார்கள். நாயகன், மகாநதி, குணா, தசாவதாரம், விருமாண்டி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே அவர் நடனம் ஆடாமல் இருப்பார்.
ஒரு பேட்டியில் பேசிய கமல் ‘80களில் எல்லா படங்களிலும் எனக்கு மைக்கை கொடுத்து ஆடவிடுவார்கள். இது எப்போது என்னை விட்டு போகும் என எதிர்பார்த்து காத்திருந்தேன். நடனத்தை ஆனந்த் பாபுவும், மைக்கை மோகனும் வாங்கி கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின்னரே எனக்கு நிம்மதி ஆனது’ என சொல்லியிருந்தார்.
அதேபோல், வேட்டையாடு விளையாடு படத்தில் நான் எந்த காட்சியிலும் நடனம் ஆடியிருக்க மாட்டேன். கவுதம் மேனன் ஒரு காட்சியில் என்னை நடனமாட சொன்னார். ஆனால், நான் மறுத்துவிட்டேன். அந்த படத்தில் நான் ஏற்ற கதாபாத்திரத்திற்கு அதுதான் சரி. நான் சொன்னதை கவுதம் மேனனும் ஏற்றுக்கொண்டார்’ என சொன்னார்.
அதற்கு ‘தங்களின் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இயக்குனர்கள் கேட்பது சரிதானே’ என கேட்டதற்கு பதில் சொன்ன கமல் ‘நாயகன் படத்தில் நான் நடனமாடக் கூடாது என்பதில் மணிரத்னம் தெளிவாக இருந்தார். அதேபோல், பதினாறு வயதினிலே படத்தில் ‘இவன் சப்பாணி.. இவனுக்கு நடனம் தெரியாது’ என்பதில் பாரதிராஜா தெளிவாக இருந்தார். அவர்கள் எல்லாமே வெற்றியும் பெற்றார்கள்’ என பதில் சொன்னார்.
ஒருபக்கம். கமல் தக் லைப் படத்தை முடித்துவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு AI தொழில் நுட்பத்தை கற்றுக்கொண்டார் என சொல்லப்படுகிறது. சினிமாவில் வரும் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொண்டு தன்னை அப்டேட் செய்து கொள்கிறார். தக் லைப் படத்திற்கு பின் அன்பு - அறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார்.