ரஜினியோடு துணிந்து மோதி ஹிட் கொடுத்த கங்கை அமரன்!.. அட அந்த பிரபு படமா?...

By :  Murugan
Update:2025-03-11 11:57 IST

Rajinikanth: சினிமாவில் எந்த நடிகரின் படம் எப்போது ஹிட் அடிக்கும் என கணிக்கவே முடியாது. ஒரு பெரிய நடிகரின் படம் ஓடமால் தோல்வி அடையும், அந்த படத்தோடு வெளியான ஒரு சின்ன படம் ஹிட் அடித்துவிடும். ரசிகர்களுக்கு எது பிடிக்கிறதோ அந்த படம் ஓடிவிடும். ஷங்கரின் இயக்கத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் போன்ற படங்கள் ஓடவில்லை.

ஆனால், குடும்பஸ்தன், டிராகன் போன்ற சின்ன பட்ஜெட்டுகளில் உருவான படங்கள் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தது. எனவே, நல்ல கதையும், ரசிகர்களை கவரும் படி திரைக்கதையும் இருந்தால் படம் ஓடும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சினிமாவில் நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், எடிட்டர் போன்ற துறைகளிலிருந்து இயக்குனராக பலரும் மாறியிருக்கிறார்கள்.

ஆனால், இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகிய அவதாராங்களை எடுத்து இயக்குனராக மாறிய ஒரே ஒருவர் கங்கை அமரன் மட்டுமே. இவர் இயக்கிய கோழி கூவுது படம் சூப்பர் ஹிட் அடிக்க தொடர்ந்து பல படங்களையும் இயக்கினார். இவர் இயக்கிய பெரும்பாலான படங்களில் பிரபுவும், ராமராஜனுமே ஹீரோவாக நடித்தார்கள்.


ராமராஜனை வைத்து கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. தமிழகத்தின் சில தியேட்டர்களில் இப்படம் ஒரு வருடமெல்லாம் ஓடியது. பிரபுவை வைத்து கோழி கூவுது, பொழுது விடிஞ்சாச்சி, கும்பக்கரை தங்கையா, சின்னவர் போன்ற படங்களை இயக்கினார்.

இதில், கும்பக்கரை தங்கையா படம் 1991ம் வருடம் பொங்கலுக்கு வெளியானது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நாட்களில் ரஜினியின் தர்ம துரை படமும் அதே தேதியில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டது. எனவே, கும்பக்கரை தங்கையா பட தயாரிப்பாளர் அதிர்ச்சி அடைந்தார். ரஜினி படத்தோடு ரிலீஸ் செய்தால் வசூல் இருக்காது என பயந்த அவர் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாம் என கங்கை அமரனிடம் சொன்னார்.

ஆனால், படத்தின் மீது நம்பிக்கை கொண்ட கங்கை அமரன் இந்த படம் கண்டிப்பாக ஓடும்.. தைரியமாக ரிலீஸ் செய்யுங்கள் என சொல்ல அவ்வாறே ரிலீஸ் செய்யப்பட்டு அப்படம் ஹிட் அடித்தது. இந்த படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Tags:    

Similar News