இளையராஜா பார்த்த முதல் ஷூட்டிங்!. நடனமாடி கொண்டிருந்த ஜெயலலிதா!.. செம பிளாஷ்பேக்!...
Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் பட்டி தொட்டிங்கும் பிரபலமானது. அப்போதெல்லாம் எல்லோரின் வீட்டிலும் ரேடியோ மட்டுமெ இருக்கும். குறிப்பிட்ட நேரத்தில் அன்னக்கிளி உன்னை தேடுதே பாடல் ஒலிபரப்பாகும். அப்போது ஒவ்வொரு வீட்டிலும் தொடர்ச்சியாக ரேடியோவை ஆன் செய்வார்களாம். இதை இளையராஜாவே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.
தேனி மாவட்டம் பண்ணைபுரத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர்தான் இளையராஜா. இவர் பிறந்த போது இவரின் அப்பா இவருக்கு வைத்த பெயர் ஞானதேசிகன். பள்ளியில் சேர்க்கும்போது ராஜைய்யா என மாற்றிவிட்டனர். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் எல்லாம் இவரை ராசைய்யா என அழைத்திருக்கிறார்கள்.
சென்னை வந்து இசையை பயின்றபோது மாஸ்டர் அவரின் பெயரை ராஜா என மாற்றியிருக்கிறார். அன்னக்கிளி படத்தில் இசையமைக்கும்போது அப்படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் ராஜாவின் முன்பு இளைய சேர்த்து இளையராஜா என மாற்றினார். அதன்பின் அதுவே அவரின் பெயராக மாறிவிட்டது.
80களில் முக்கியமான இசையமைப்பாளராக இளையராஜா இருந்தார். அப்போதிருந்த எல்லா முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இவர்தான் இசை. ஒரு படத்தையே காப்பாற்றும் ஆற்றல் அவரின் இசையில் இருந்தது. இப்போதும் படங்களுக்கு இசையமைப்பது, இசைக்கச்சேரிகளை நடத்துவது என பிஸியாக இருக்கிறார். அதோடு, நாளை லண்டனில் சிம்பொனி இசையையும் நிகழ்த்தவுள்ளார். இது இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் படி அமைந்திருக்கிறது.
இந்நிலையில், ஒருவிழாவில் பேசிய இளையராஜா அவர் பார்த்த சினிமா ஷூட்டிங் தொடர்பான அனுபத்தை பகிர்ந்துள்ளார். எட்டாம் வகுப்பு படிக்க பணமில்லாமல் வைகை அணையில் வேலை செய்து கொண்டிருந்தேன். அப்போது அங்கு இயக்குனர் ஸ்ரீதர் வந்திருப்பதாக சொன்னார்கள். ஸ்ரீதர் எனக்கு, பாரதிராஜாவுக்கு, என் அண்ணன் பாஸ்கரனுக்கு மிகவும் பிடித்த இயக்குனராக இருந்தார்.
எனவே, அவரை பார்க்க ஓடினோம். வெண்ணிற ஆடை ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது. ஜெயலலிதா மேடம், ‘அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்’ பாடலுக்கு நடனமாடிக்கொண்டிருந்தார். அதுதான் நான் பார்த்த முதல் ஷூட்டிங். ஜெயலலிதா மேடத்திற்கும் அதுதான் முதல் திரைப்படம்’ எனப் பேசியிருந்தார். பின்னாளில் ஸ்ரீதரின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார் என்பதுதான் வரலாறு.