அந்த படத்தை சுட்டுதான் ஹேராம் எடுத்தேன்!.. இப்படி ஓப்பனா சொல்லிட்டாரே கமல்!...
கமல்ஹாசன் எழுதி, தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம்தான் ஹேராம். 2000ம் வருடம் வெளியான இப்படத்தில் கமலுடன் ராணி முகர்ஜு, வசுந்தரதாஸ், ஹேமா மாலினி, கவிஞர் வாலி, அதுல் குல்கர்னி, கிரிஸ் கர்நாட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். நடிகர் ஷாருக்கான் இப்படத்தில் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருந்தார்.
இளையராஜாவின் இசையில் அத்தனை பாடல்களும் இனிமையாக இருந்தது. மகாத்மா காந்தி சுட்டு கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் கதையை உருவாக்கியிருந்தார் கமல்ஹாசன். காந்தியை சுட்டு கொலை செய்ய எப்படி திட்டமிட்டார்கள்?, காந்தி என்ன தவறுகளை செய்தார்?, காந்தியின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் என எல்லாவற்றையும் இந்த படத்தில் அலசியிருந்தார்.
குறிப்பாக இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இந்து - முஸ்லீம் மக்களிடையே எப்படி பிரச்சனை ஏற்பட்டது என்பதையும் தெளிவாக காட்டியிருந்தார். காந்தியை கொல்ல செல்லும் கமல் மனம் மாறுவதையும், காந்தி கோட்சாவால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவர் பதட்டப்படுவது போலவும் காட்சிகள் வரும்.
இந்த படம் விமர்சனரீதியாக வரவேற்பை பெற்றாலும் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. ஆனால், மணிரத்னம் போன்ற இயக்குனர்களே இப்படத்தின் மேக்கிங்கை பாராட்டி இருந்தனர். கமல்ஹாசனின் நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஹேராம் முக்கியமான படமாக இருக்கிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ‘பழம் பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கிய ‘என்னதான் முடிவு’ என்கிற படம்தான் எனக்கு ஹேராம் எடுக்க இன்ஸ்பிரேஷனாக அமைந்தது. இதை அவரிடம் சொன்னபோது அவர் இதை ஒத்துகொள்ளவில்லை. ‘ஹேராம் படம் வேறு. என் படம் வேறு. என்னை சந்தோஷப்படுத்துவதற்காக சொல்றியா?’ என சண்டை போட்டார்.
நீங்கள் சண்டை போடுவது உங்கள் பெருந்தன்மை. உண்மையை சொல்வது என் பெருந்தன்மை என சொல்லிவிட்டேன். அதேபோல், ஒருவனை கொல்லப்போகும் வில்லன் அவனிடம் மன்னிப்பு கேட்பது போலவும் காட்சி அந்த படத்தில் வரும். இதைத்தான் அன்பே சிவம் படத்திலும் வைத்திருந்தேன்’ என பேசியிருக்கிறார். என்னதான் முடிவு திரைப்படம் 1965ம் வருடம் வெளியானது. இந்த படத்தில் ஏவிஎம் ராஜன், பாலையா, வி.கே.ராமசாமி, வி.எஸ்.ராகவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.