இந்த பாட்ட நீ பாடக்கூடாது!.. இளையராஜாவிடம் கோபம் காட்டிய பஞ்சு அருணாச்சலம்!...

By :  MURUGAN
Published On 2025-05-28 08:38 IST   |   Updated On 2025-05-28 08:38:00 IST

Ilayaraja: சொந்த ஊரில் பாவலர் பிரதர்ஸ் என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தவர்தான் இளையராஜா. அவர், அவரின் தம்பி அமரன், அண்ணன் பாஸ்கர் ஆகிய மூவரும் இந்த இசைக்குழுவில் முக்கியமானவர்கள். சிறு வயது முதலே இளையராஜாவுக்கு இசையில் ஆர்வம் இருந்தது. கிடைக்கும் பொருட்களில் தட்டி தட்டி இசையை உருவாக்கி வந்தார்.

வளர்ந்ததும் சகோதர்களுடன் சேர்ந்து கம்யூனிச மேடைகளில் பாடி வந்தார்கள். பெரும்பாலும் சினிமா பாடல்களை பாடுவார்கள். சில சமயம் இளையராஜா தனது சொந்த டியூனை வைத்தும் பாடல்களை பாடுவார். யாராவது ‘இது எந்த படத்தின் பாடல்?’ எனக்கேட்டால் ‘இது புதிய படத்தின் பாடல். படம் இன்னும் வெளிவரவில்லை’ என பொய் சொல்லிவிடுவாராம். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அதன்பின் இசையமைப்பாளர் ஆகும் ஆசையில் சென்னை சென்று வாய்ப்பு தேடினார் இளையராஜா. சில இசையமைப்பாளர்களிடம் வேலை செய்து கொண்டே வயலின், கிடார், கீ போர்ட் போன்ற இசைக்கருவிகளை கற்றுக்கொள்ளும் வகுப்புகளுக்கும் போனார். ஒருகட்டத்தில் இனிமேல் நம்மால் இசையமைக்க முடியும் என்கிற நம்பிக்கை அவருக்கு வந்தது.


பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் சென்று வாயப்பு கேட்டார். ஆனால், ராஜாவை யாரும் நம்பவில்லை. அப்போது பிரபல தயாரிப்பாளர், கதாசிரியர் மற்றும் பாடலாசிரியராக இருந்த பஞ்சு அருணாச்சலத்தை சந்தித்து வாய்ப்பு கேட்டார். இசைக்கருவி எதுவுமில்லாமல் அவர் அமர்ந்திருந்த மேசையிலேயே கைகளால் தட்டி பாடல்களை பாடிக்காட்டினார்.

ராஜாவின் மீது நம்பிக்கை வைத்த பஞ்சு அருணாச்சலம் தான் கதை எழுதி தயாரித்த அன்னக்கிளி படத்தில் ராஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதோடு, அவரின் பெயரை இளையராஜா எனவும் மாற்றினார். தன் மீது நம்பிக்கை வைத்து தன்னை அறிமுகம் செய்து வைத்தவர் என்பதால் ராஜாவுக்கு பஞ்சு அருணாச்சலம் மீது எப்போதும் அன்பும், மரியாதையும் உண்டு.

ராஜாவின் மீது மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்டவராக பஞ்சு அருணாச்சலமும் இருந்தார். இதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை சொல்ல முடியும். புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் ‘ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்ல ஆள.. ஒரு ராணியும் இல்லை ஆள’ என்கிற பாடல் வரும். அந்த பாடலை இளையராஜாவே பாடியிருந்தார். அதன்பின் பஞ்சு அருணாச்சலத்திடம் அந்த பாடலை போட்டு காட்டினார் இளையராஜா.

அந்த பாடல் வரிகளை கேட்ட அவர் ‘என்ன ராஜா?.. பாடல் முழுக்க நெகட்டிவாக இருக்கிறது. முழுக்க அறச்சொல்லாக இருக்கிறது. நீ ராஜா.. உனக்கு யாருமில்லை என நீயே சொல்வது போல இருக்கிறது.. இந்த பாடலை நீ பாடியிருக்கக் கூடாது. வேறு பாடகரை வைத்து மீண்டும் ரிக்கார்டிங் செய்’ என சொல்லியிருக்கிறார். எனவே, எஸ்.பி.பியை வைத்து மீண்டும் அந்த பாடலை ரிக்கார்டிங் செய்தார் இளையராஜா.

Tags:    

Similar News