கண்ணதாசனைக் குடிகாரன்னு திட்டிய எம்எஸ்வி... ஆனா அவரே அழும் வகையில் உருவான பாடல்!
கண்ணதாசனை குடிகாரன்னு எம்எஸ்வி. திட்டினார். அப்போது உருவான பாடல் என்னன்னு பார்க்கலாமா...
1962ல் முத்துராமன், தேவிகா நடித்த படம் நெஞ்சில் ஓர் ஆலயம். ஸ்ரீதர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் இசை அமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்எஸ்.விஸ்வநாதன். இந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் கிளாசிக். குறிப்பாக சொன்னது நீதானா பாடல் காலத்தைத் தாண்டி நிற்கும் பாடலாக அமைந்தது.
நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் கணவன் இறக்கும் தருவாயில் தன் மனைவியைப் பார்த்து வேறொரு ஆணைத் திருமணம் செய்யும்படி கூறுவார். இதனைக் கேட்ட மனைவிக்கோ அதிர்ச்சி தாங்க முடியாது. இந்த சமயத்தில் வருவதுதான் பாடல் தான் சொன்னது நீ தானா.பாடல். அதாவது தனது கணவரைப் பார்த்து மனைவி கேட்கும் பாடல். இந்த சிச்சுவேஷனுக்கு ஒரு பாடலை உருவாக்கணும்னு எம்எஸ்வியிடம் இயக்குனர் ஸ்ரீதர் சொன்னார்.
அதற்காக பல நாள்களாக எம்எஸ்வி. டியூன் போட்டுப் பார்த்தார். ஆனால் எதுவுமே செட்டாகவில்லை. உடனே கண்ணதாசனை அழைத்து முதலில் பாடல் எழுதச் சொல்வோம். அதற்குப் பிறகு அந்த வரிகளுக்கு ஏற்ப டியூன் போடலாம் என முடிவெடுத்தார்.
கண்ணதாசன் அன்று 1 மணி ஆகியும் வரவில்லையாம். எப்பவுமே 11 மணிக்கு ஸ்டுடியோ வந்து விடுவாராம். அன்று எம்எஸ்வி.க்கு நல்ல பசி. கண்ணதாசன் இவ்ளோ நேரமாகியும் வரலையா? இந்த குடிகாரர்களை நம்பினாலே இப்படித்தான் என்று சொன்னாராம்.
அதைப் பக்கத்தில் இருந்த வேலையாள் ஒருவர் கேட்டுவிட்டார். 2 மணிக்கு கண்ணதாசன் வந்தாராம். வேலையாள் எம்எஸ்வி. திட்டியதைச் சொன்னாராம். ஆனாலும் தனது உயிர் நண்பனா இப்படி திட்டினான் என மனதுக்குள் வருந்தினாராம். ஆனாலும் ஏதோ டென்ஷன்லதான் திட்டிருப்பான்னு அதைப் பெரிதுபடுத்தவில்லையாம்.
சாப்பிட்டு முடித்து எம்எஸ்வி. ஸ்டுடியோ வந்தாராம். அப்போது பாடலுக்கான கண்ணதாசனிடம் சிச்சுவேஷனை விளக்கிச் சொல்லி இருக்கிறார். அதே நேரம் தன் நண்பன் தன்னைக் குடிகாரன்னு திட்டியதும் கண்ணதாசனின் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது.
அதனால் சிச்சுவேஷனையும், தன்னைத் திட்டியதையும் ஒரே நேரத்தில் சொல்லும் விதமாக அவர் பாடல் எழுதினார். அதுதான் 'சொன்னது நீ தானா? சொல் சொல்' என் உயிரே என்று முதல் வரியை எழுதினார். இதைக் கேட்டதும் எம்எஸ்வி.க்கு அழுகையாக வந்ததாம். 'நான் ஒரு கோபத்தில் உன்னை அப்படித் திட்டிட்டேன்டா'ன்னு சொல்லி இருக்கிறார். அதற்கு கண்ணதாசன், 'விச்சு நீ ஒரு குழந்தைடா. போய் டியூனைப் போடு'ன்னு சொன்னாராம்.