எம்.ஜி.ஆர் தயாரிப்பில் பாரதிராஜா இயக்கவிருந்த பொன்னியின் செல்வன்!. நடக்காமல் போனதன் பின்னணி!...
MGR Bharathi raja: எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வந்தபின்னர் அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. எனவே, நல்ல திரைப்படங்களை பார்ப்பதை மட்டும் அவர் விடவில்லை. கமல், சத்தியராஜ், பாக்கியராஜ், பாரதிராஜா போன்ற அவருடன் நெருங்கி பழகியவர்களின் படங்களை மட்டும் பார்ப்பார். பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே திரைப்படம் எம்.ஜி.ஆரை புரட்டி போட்டது.
இது பற்றி ஒரு படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர் ‘நான் சினிமாவில் மீண்டும் வராமல் போனதற்கு காரணமே பாரதிராஜா தான். அவர் வந்ததால்தான் நான் வராமல் போனேன். முதலமைச்சராக இருந்தும் சில விதிகளை வைத்து வரலாம் என்று திட்டமிட்டேன். அப்போதுதான் 16 வயதினிலே படம் வெளியானது. அதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன்.
ஆடம்பரம் இல்லாமல் சாதாரணமாக அமைத்த காட்சிகள் கூட பெரிய வரவேற்பினை பெற்று இருந்தது. வேற மாதிரியான படமாக இருந்தது. அடுத்து கிழக்கே போகும் ரயில் திரைப்படம் வெளிவந்தது. அந்த படம் ஓடோ ஓடுனு ஓடியது. அப்போதுதான் புரிந்து கொண்டேன். சினிமா உலகம் மாறிவிட்டது. இனி என் சினிமா பாணி எடுப்படாது என்பதால் தான் அந்த ஆசையை விட்டு விட்டேன்’ என பேசியிருந்தார்.
ஒருபக்கம், சரித்திர கதைகளில் ஆர்வமுள்ள எம்.ஜி.ஆர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்பட்டு அந்த நாவலின் உரிமையை 10 ஆயிரம் கொடுத்து வாங்கினார். மேலும், 1958ம் வருடம் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்கப்போகிறேன் என்றும் அறிவித்தார்.
எம்ஜிஆருடன் ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, பத்மினி, சாவித்ரி, பி.சரோஜாதேவி, எம்.என்.ராஜம், டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், ஓ.ஏ.கே.தேவர், சித்தூர் நாகையா ஆகியோரும் நடிப்பதாக இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாக எம்ஜிஆர் ஒரு விபத்தில் சிக்கினார். காயம் பலமாக இருந்ததால் குணமாக 6 மாதமாகும் என்கிற நிலை ஏற்பட்டதால் அந்தப்படம் கைவிடப்பட்டது. தொடர்ந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகும் அந்த நாவலுக்கான உரிமையைப் புதுப்பித்தனர். அப்போதும் எம்ஜிஆரால் அந்தப்படத்தைத் தொடர முடியாமல் போனது.
இந்நிலையில்தான், ஊடகம் ஒன்றில் பேசிய பாரதிராஜா ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துகொண்டார். நான் கைதியின் டைரி படத்தின் பாடல் காட்சியை எடுத்துக்கொண்டிருந்த போது அங்கு எம்.ஜி.ஆர் வந்தார். அப்போது அவர் முதல்வர். ‘பொன்னியின் செல்வன் நாவலை நீ படமாக எடுக்க வேண்டும். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் அதை தயாரிக்கும்’ என்றார். மேலும், கமல் வந்தியத்தேவனாகவும், குந்தவையாக ஸ்ரீதேவி நடிக்கட்டும் என்றார்.
எம்.ஜி.ஆரை வைத்து படம்தான் இயக்க முடியவில்லை. அவரின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கலாம் என்கிற மகிழ்ச்சியில் இருந்தேன். ஆனால், அது நடந்த ஒரு வாரத்தில் சேலத்தில் ஒரு மீட்டிங்கில் அவர் கீழே விழுந்து அவரை அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுவிட்டார்கள். அதன்பின் அது நடக்காமலே போய்விட்டது’ என சொல்லியிருக்கிறார்.
எம்.ஜி.ஆருக்கு பின் பொன்னியின் செல்வன் உரிமையை கமல் வாங்கினார். ஆனால், அவராலும் அப்படத்தை எடுக்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் எடுத்தார் இரண்டு பாகங்களாக என்பது குறிப்பிடத்தக்கது.