வடிவேலுவா? சந்தானமா?!. சிம்பு எடுத்த அந்த முடிவு!.. ஒரு பிளாஷ்பேக்!...

By :  MURUGAN
Update: 2025-05-15 12:46 GMT

சினிமாவில் வாய்ப்பு என்பது மிகவும் முக்கியம். யாரேனும் ஒருவர் ஒருவரை நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒருவர் வாய்ப்பு கொடுக்காமல் இன்னொருவர் மேலே வரமுடியாது. ஒரு நடிகரோ, இயக்குனரோ இல்லை தயாரிப்பாளரோ ஒரு நடிகரை நம்பி வாய்ப்பு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் திறமை இருந்தாலும் நிரூபிக்க முடியாது.

சினிமா பின்னணியில் இருந்து வந்தால் வாய்ப்புகள் சுலபமாக கிடைத்துவிடும். ஆனால், பின்னணி இல்லாமல் வருபவர்கள் போராட வேண்டும். வாய்ப்பு என வரும்போது சினிமாவில் நிறைய போட்டிகள் உண்டு. ஒருவருக்கு கொடுக்கப்படும் வாய்ப்பை தட்டிப்பறிக்க பலரும் காத்திருப்பார்கள். அதையெல்லாம் மீறியே சினிமாவில் வாய்ப்பை பெற்று சாதித்து காட்ட வேண்டும்.

இப்போது சினிமாவில் ஹீரோவாக நடித்துக்கொண்டிருக்கும் சந்தானம் மிகவும் எளிமையான பின்னணியில் இருந்து வந்தவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சிகளில் நடித்துக்கொண்டிருந்தார். அப்படியே சினிமாவில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார்.


ஆர்யா, ஜீவா, சிம்பு உள்ளிட்ட பல இளம் நடிகர்களின் படங்களிலும் காமெடி நடிகராக நடித்திருக்கிறார் சந்தானம். விஜய், அஜித்துடனும் சில படங்களில் நடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் ஹீரோவாக நடிப்பது என முடிவெடுத்தார். அதனால் அவரின் வழக்கமான காமெடியை ரசிகர்கள் ரொம்பவே மிஸ் செய்தார்கள்.

கடந்த 10 வருடங்களாக காமெடி நடிகராக சந்தானத்தை ரசிகர்கள் பார்க்கவில்லை. அவர் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. ஆனால், அந்த படங்கள் பெரிதாக ஈர்க்கவில்லை. ஒருவழியாக மற்ற ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது என்கிற நல்ல முடிவுக்கு வந்துள்ளார் சந்தானம். சிம்புவின் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார்.

மன்மதன் படத்தில் சந்தானத்தை காமெடியனாக அறிமுகம் செய்து வைத்தவர் சிம்புதான். இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கதை இருக்கிறது. சிம்பு லொள்ளு சபா நிகழ்ச்சியின் பெரிய ரசிகர். ஷூட்டிங்கில் இருந்தாலும் அந்த நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பாகும்போது ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு நிகழ்ச்சியை பார்த்து ரசித்துவிட்டுதான் மீண்டும் ஷூட்டிங்கில் கலந்துகொள்வாராம்.

மன்மதன் படத்தில் யாரை காமெடியனாக போடலாம் என யோசித்தபோது உதவி இயக்குனர்கள் வடிவேலுவை சொல்லி இருக்கிறார்கள். ஆனால், சிம்புவோ லொள்ளு சபா நிகழ்ச்சியில் வரும் சந்தானத்தை போடலாம் என சொல்லி இருக்கிறார். இதில் யாருக்குமே விருப்பம் இல்லை. ஆனால், சிம்பு அதில் உறுதியாக இருந்திருக்கிறார். அந்த நன்றி உணர்ச்சியில்தான் இப்போது சிம்புவுடன் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் சந்தானம்.

Tags:    

Similar News