ரஜினியை வீட்டுல உட்கார முடியாமல் செய்த கேப்டன் பாடல்... இயக்குனர் நெகிழ்ச்சி
சின்னக்கவுண்டர் படத்தை ஆர்.வி.உதயகுமார் இயக்கியுள்ளார். விஜயகாந்தின் திரையுலக வரலாற்றில் இது ஒரு மைல் கல்லான படம். நல்லா எண்ணைத் தடவி ஏற்றிச்சீவிய தலைமுடியும், வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை, வெள்ளைத் துண்டு என பட்டையைக் கிளப்பி ஊர்ப்பஞ்சாயத்துத் தலைவராக நடித்து இருந்தார் விஜயகாந்த். அவர் சின்னக்கவுண்டராக வலம் வரும்போதெல்லாம் நம் நெஞ்சில் நிறைந்து நின்றார்.
சின்னக்கவுண்டர்: 1992ல் வெளியான இந்தப் படத்தில் விஜயகாந்துடன் சுகன்யா, மனோரமா, வடிவேலு, கவுண்டமணி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் எல்லாமே அற்புதம். அந்த வானத்தைப் போல, சின்னக்கிளி வண்ணக்கிளி, கண்ணுபட போகுதய்யா, கூண்டுக்குள்ள உன்ன வச்சு, முத்துமணி மால, சொல்லால் அடிச்ச ஆகிய பாடல்கள் உள்ளன. அனைத்தையும் எழுதியவர் ஆர்.வி.உதயகுமார்தான்.
அந்த வானத்தைப் போல: இந்தப் படத்தில் வந்த சூப்பர்ஹிட் பாடல்தான் அந்த வானத்தைப் போல. இதை எழுதியவர் ஆர்.வி.உதயகுமார். இந்தப் பாடலை எப்படி எழுதுனீங்கன்னு டிவி நிகழ்ச்சி ஒன்றில் மாக்காப்பன் கேட்க, அந்த நினைவுகளைப் பகிர்ந்துள்ளார் இயக்குனர். என்ன சொல்றாருன்னு பாருங்க.
2 லட்சம்: 7 நாள்ல படம் எடுக்கலாம்னு ஒரு ஐடியா பண்ணி ஆபாவணன் போய் ராவுத்தர், விஜயகாந்த் சாருக்கிட்ட சொன்னார். அப்போ 'இப்படி எல்லாமா படம் எடுப்பீங்க? என்ன சம்பளம் தருவீங்கன்னு கேட்டார். நாங்க 2 லட்ச ரூபா தான் தர முடியும். அது கூட கொடுக்க வேண்டாம். நான் 35 நாள் தரேன். நீ அதே சம்பளத்துக்கு நான் வேலை செய்றேன். நீங்க இப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்காதீங்க' னு சொல்லி ஒரு வாழ்க்கையை உருவாக்கி விட்டவரு.
ரஜினி: திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு ஆபாவாணனின் யூனிட்டுக்கு அது விஜயகாந்த் சார் தான். அந்த யூனிட்ல நானும் இருந்ததால அந்த நன்றி செலுத்துதலின் வெளிப்பாடுதான் அந்த வானத்தைப் போல. அவருடைய மறைவுக்குப் பின்னாடி எங்களுக்கு ஒரு 1000 போன் வந்திருக்கும். ரஜினி சாரும் கூப்பிட்டு 'என்னங்க பாட்டு எழுதுனீங்க?
நீங்க அவர் உடம்பு போகும்போது அந்தப் பாட்டை போட்டு என்னால வீட்ல இருக்க முடியல'ன்னு சொன்னாரு. எந்த ஒரு மனுஷனுக்கும் அந்த மாதிரி ஒரு உயர்வான வரிகள் அமைஞ்சது இல்ல. இறைவனா கொடுத்தது அது என்கிறார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார்.