இவ்வளவு கஷ்டப்பட்டாரா அஜித்?!.. விடாமுயற்சி மேக்கிங் வீடியோ டெரறா இருக்கே!....
Vidaamuyarchi: லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள திரைப்படம்தான் விடாமுயற்சி. துணிவு படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த படத்தில் நடித்தார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு போன வருடம் ஜனவரி மாதம் துவங்கியது.
அசர்பைசான் நாட்டில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக நடந்தது. ஏனெனில், லைக்கா நிறுவனம் நிதிநெருக்கடியில் சிக்கியது. படப்பிடிப்பில் மணல் புயல் வீசியது, அதிக பனி, மழை உள்ளிட்ட பல காரணங்களால் ஷூட்டிங் அடிக்கடி நிறுத்தப்பட்டது. இதனால் அஜித்தே குட் பேட் அக்லி படத்தில் நடிக்கப்போனார்.
ஒருவழியாக படத்தை முடித்து பொங்கலுக்கு ரிலீஸ் என்றார்கள். ஆனால், அதுவும் வெளியாகவில்லை. இப்போது பிப்ரவரி 6ம் தேதி படம் ரிலீஸ் என அறிவித்திருக்கிறார்கள். இப்படத்திற்கான முன்பதிவும் வேகமாக நடந்து வருகிறது. முன்பதிவிலேயே 25 கோடி வரை இப்படம் வசூல் செய்திருக்கிறது.
இந்நிலையில்தான் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில், இப்படத்தின் ஷூட்டிங்கில் அஜித் ஓட்டும் ஜீப் கீழே கவிழ்ந்தபோது என்ன ஆனது என காட்டியிருக்கிறார்கள். மேலும், பனியின் போதும், மணல் புயல் வீசிய போதும் படக்குழு எவ்வளவு கஷ்டப்பட்டனர் என காட்டியிருக்கிறார்கள்.
ஜீப் விபத்தில் சிக்கிய அஜித்தும், ஆரவும் ஆம்புலன்ஸில் ஏறி செல்வது உள்ளிட்ட பல காட்சிகள் அதில் இடம் பெற்றிருக்கிறது. வலிமை படம் வெளியானபோது அஜித் கீழே விழும் காட்சிகள் காட்டப்பட்டது. இப்போதும், அது போன்ற வீடியோக்களையே புரமோஷனுக்காக லைக்கா நிறுவனம் பயன்படுத்தி இருக்கிறது.