அனிருத் இந்தி, தெலுங்குன்னு கலக்குனா!.. சாய் அபயங்கர் அடுத்தடுத்து உச்சம் தொடுறாரே!..
அனிரூத், ஜிவிபிரகாஷ் போன்ற முன்னணி இசையமைப்பாளர்களை தொடர்ந்து வளர்ந்து வரும் புது இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தற்போது மலையாள மொழி படத்தில் கால் பதிக்க உள்ளார்.
பிரபல தமிழ் திரைப்படப் பின்னணிப் பாடகர்களான திப்பு மற்றும் ஹரிணியின் மகனான சாய் அபயங்கர் ’கட்சி சேர’ என்ற ஆல்பம் பாடல் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதை தொடர்ந்து ’ஆச கூட’ மற்றும் ’சித்திர புத்திரி’ பாடல்கள் யூடியூபில் 200 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இளைகர்களிடையே வைரலாக உலகளவில் பிரபலமானார். இந்த பாடல்கள் அவர் திரையுலகில் இசையமைப்பாளராக வாய்ப்பினை ஏற்படுத்தி தந்தன.
ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத், ஜி.வி.பிரகாஷ் குமார், சி.சத்யா ஆகியோருடன் பணியாற்றியுள்ள சாய் அபயங்கர் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் நேரடி இசை நிகழ்ச்சிகளை நடத்தி ரசிகர்களை பெரிதாக கவர்ந்துள்ளார்.
மேலும், லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் தயாரிப்பில், ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதை தொடர்ந்து கருப்பு, எஸ்.கே 24, அல்லு அர்ஜூன் மற்றும் அட்லி இணைந்து பணியாற்றி வருகின்ற படம் என 10 படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக உள்ளார்.
இந்நிலையில் சாய் அபயங்கர் தற்போது மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் பல்டி படத்தில் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார். இப்படம் சாய் அபயங்கர் மலையாள சினிமாவில் அறிமுகமாகவிருக்கும் முதல் படமாகும். இதற்காக ஒரு சிறப்பு வீடியோவை பல்டி படக்குழு வெளியிட்டுள்ளது. இது குறித்து சாய் அபயங்கருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மலையாளத்தில் மோகன்லால் படங்கள் தொடர்ந்து வசூலை வாரி குவித்து வரும் நிலையில், சாய் அபயங்கரும் இணைந்து விட்டால் மெகா ஹிட் தான் என்கின்றனர்.