தலைவலியா?.. தாறுமாறா?.. தலைவன் தலைவி படம் எப்படி இருக்கு?.. மெகா சீரியல் தோத்துடும்.. விமர்சனம்!..
விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்கே சுரேஷ், செம்பன் வினோத், தீபா, ரோஷினி ஹரிப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ள தலைவன் தலைவி படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சரியான கம்பேக் கொடுக்க வேண்டும் என நினைத்த இயக்குனர் பாண்டிராஜ் கிராமத்துக் குடும்பக் கதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
படம் தொடங்கியதில் இருந்தே மதுரையும் மதுரையின் அடையாளமாக மாறி நிற்கும் புரோட்டாவும் அதனை சுற்றிய காட்சிகள் மதுரைக்கே நம்மை அழைத்துச் சென்று விடுகின்றன. விஜய் சேதுபதி வித விதமான புரோட்டாக்களை செய்து நித்யா மேனனுக்கு கொடுக்க, அவர் சாப்பிடும் அழகை பார்த்தால் நமக்கே பசி எடுத்துவிடும் போல இருக்கிறது.
படத்தின் ஆரம்பத்திலேயே குல தெய்வமான கருப்பண்ண சாமி கோயிலில் நித்யா மேனனின் குழந்தைக்கு பிறந்த முடி எடுப்பதற்காக அவருடைய குடும்பம் வருகிறது. அப்பாவை அழைக்காமல் எப்படி இதை செய்யலாம் என்றும் என் மகளை என்னோட அனுப்புங்க என குழந்தைக்கு பாதி மொட்டை அடித்த நிலையில், வந்து ரகளை செய்கிறார் விஜய் சேதுபதி.
அதன் பின்னர், உங்களுக்கு என்ன தான் பிரச்சனை என ஒவ்வொருத்தராக கேட்க, படத்தின் கதை தொடங்குகிறது. ஆகாச வீரனுக்கும் பேரரசிக்கும் திருமணம் செய்ய முடிவு செய்கின்றனர். ஆனால், ஆகாச வீரனின் குடும்ப பின்னணி காரணமாக திருமணம் வேண்டாம் என நித்யா மேனனின் அண்ணனான ஆர்கே சுரேஷ் தடுக்க, அவரது பேச்சை மதிக்காமல் புரோட்டா செஞ்சுக் கொடுத்தே காதலை வளர்த்த நம்ம புரோட்டா மாஸ்டர் தான் வேண்டும் என நித்யா மேனன் விஜய் சேதுபதி பைக்கில் ஏறி சென்று அவரை கட்டிக் கொள்கிறார்.
ஆரம்பத்தில், கடையின் கல்லா பெட்டியில் விஜய் சேதுபதிக்கு அப்பாவாக நடித்துள்ள சரவணன் அவரது மனைவியை விரட்டிவிட்டு மருமகளை உட்கார வைக்க, கடையின் பெயரும் தங்கச்சி பெயரில் இருந்து பேரரசி புரோட்டா கடையாக மாற அம்மாவுக்கும் மகளுக்கும் நித்யா மேனன் மீது கோபம் வருகிறது. அதன் விளைவாக நடைபெறும் குடும்ப சண்டை காரணமாக பிரச்சனை வெடிக்க, அடி தடி சண்டையுடன் இருவரும் பிரிகின்றனர்.
கடைசியில், கருப்பு சாமி கோயிலில் பஞ்சாயத்து நடத்தி வைத்து இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பது தான் கதை. விஜய் சேதுபதி, நித்யா மேனன் போர்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால், திருமதி செல்வம் சீரியல் தோத்துவிடும் கதை தான்.
ஆனால், இப்போதும் இதே நிலை நீடிக்கிறது என்பதையும் விவாகரத்து கேட்டு பலர் கோர்ட்டுக்கு செல்வது குறித்தும் பாடம் நடத்தும் வகையில் படத்தை எடுத்து வைத்திருக்கிறார் பாண்டிராஜ். காமெடி கலந்து கொடுத்திருப்பதால், ஒருமுறை பார்க்கலாம். பல இடங்களில் தேவையற்ற சண்டைக் காட்சிகளும் விஜய் சேதுபதி கத்தி கத்தி நடிப்பதும், மனைவியிடம் அடி வாங்கிக்கொண்டே நல்ல புருஷன் என்பதை காட்டிக் கொள்வதும், ரொம்ப ஓவராகத்தான் தெரிகிறது.
ரேட்டிங்: 3.25/5.