Cinema History
அன்பே சிவம் படத்துல இதை எல்லாம் கவனிச்சீங்களா? அடடே இவ்ளோ விஷயம் இருக்கா?
உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து சுந்தர்.சி.இயக்கிய படம் அன்பே சிவம். இந்தப் படம் வெளியான புதிதில் பெரிதாகப் பேசப்படவில்லை. இன்று இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்கிறார்கள். இதற்கு என்னென்ன காரணம் என்று பார்ப்போமோ…
அன்புக்கு எல்லையே இல்லை என்பதால் படத்தின் டைட்டிலில் கூட அன்பே சிவம், என்று அதை முடிக்காமல் தொடர்வதாக கமா குறியீட்டைப் போட்டு இருப்பார்கள். படம் முழுக்க முழுக்க தத்துவமாகப் பேசப்பட்டு இருக்கும். முக்கியமாக கடவுள், வாழ்க்கை என்ற இரு விஷயங்களைப் பற்றி அலசுகிறது படம்.
படத்தில் கமலின் பெயர் நல்ல சிவம். மாதவனின் பெயர் அன்பரசு. மாதவனின் முதல் பெயரையும், கமலின் 2வது பெயரும் சேர்ந்தது தான் டைட்டில்.
நாத்திகம், கம்யூனிசம் பேசும் கமல் பெரும்பாலும் கருப்பு, சிவப்பு நிறங்களில் தான் சட்டை போட்டு இருப்பார். தான் வரைந்த ஓவியத்தில் அரிவாள், சுத்தியல், கார்ல் மார்க்ஸ் இருப்பதாக கம்யூனிசத்தைத் தீவிரமாகப் பேசுவார் கமல்.
தன்னை ஒரு கடவுளின் பிரதிபலிப்பு என்கிறார் கமல். அதே நேரம் நாத்திகம் பேசுகிறார். கார் விபத்துக்கு முன் நல்லா என்ற பெயரையும், அதன் பின் சிவம் என்ற பெயரையும் பயன்படுத்துகிறார். அதே போல மாதவன் தனக்கு அன்பு பிடிக்காது என்று கூறி தன் பெயரில் உள்ள அன்பையே எடுத்து விட்டு அர்ஸ் என்று வைத்துக் கொள்கிறார்.
படத்தில் கமலும், மாதவனும் எதிரெதிர் சிந்தனைகளைக் கொண்டவர்கள். ஆனால் ஒன்றாகப் பயணிப்பார்கள். ஒரு முறை மாதவன் எனது பிளட் குரூப் ஏபி நெகடிவ் என்பார். அதற்கு கமல் என்னுடையது ஓ பாசிடிவ் என்பார். இதிலேயே அவர்களது சிந்தனைக் குறியீடு தெரிகிறது.
ஓட்டல் ரூமில் கோமனம் காயப் போடப்பட்டு இருக்கும். மாதவன் கோமனம் யாருடையது என்று எரிச்சலுடன் கேட்பார். அதற்கு கமல் விபத்தில் பாதிக்கப்பட்ட என் காலை மடக்க முடியாது. அதனால் உள்ளாடை அணிய முடியாது. அதனால் தான் கோமனம் கட்டுகிறேன் என்பார். அதே போல விபத்தால் வலது கால் பாதிக்கப்பட்டு இருக்கும். அதனால் அதற்கு மட்டும் சின்ன ஷூவை அணிந்து இருப்பார்.
ஓட்டல் அறையில் கமல் படுத்துள்ளார். அவர் அருகில் உள்ள காலணிகளைக் கவனித்தால் தெரியும். ஒரு காலணி மட்டும் சின்னதாக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டு இருக்கும். அப்போது தான் சுனாமியைப் பற்றி அது வருவதற்கு முன்பே பேசியிருப்பார். அப்படி ஒரு தீர்க்கத்தரிசியாக கமல் இருந்தார் என்பது ஆச்சரியம் தான்.
இப்படி படத்தில் காட்சிக்குக் காட்சி நுணுக்கமான விஷயங்களையும் கவனித்து செய்திருப்பார் கமல். இது படம் பார்க்கும் ரசிகர்களுக்கு உடனேயே தெரியாது. நாலைந்து தடவை படம் பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் ஒரு தடவையாவது புரியும்.