நடிகர் விஜய் அரசியலில் இறங்கி தவெக தலைவராக மாறிவிட்டார். அதோடு ஜனநாயகன் தனது கடைசி திரைப்படம் எனவும் அறிவித்துவிட்டார். விஜய் சினிமாவை விட்டு செல்வது அவருடைய ரசிகர்கள் பலருக்கும் பிடிக்கவில்லை. அதேநேரம் அவரை தமிழக முதல்வராக பார்க்கவேண்டும் என்கிற ஆசை அவர்களுக்கு இருக்கிறது.
ஒருபக்கம் ஜனநாயகன் திரைப்படம் வருகிற 9ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு இதுவரை சென்சார் சான்றிதழ் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த போது ‘இப்படத்தை 10ம் தேதி வெளியிட்டால் என்ன பிரச்சனை?’ என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதோடு இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒருபக்கம் ஜனநாயகன் படத்துக்கு சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும் தமிழகத்தில் உள்ள பல தியேட்டர்களிலும் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் விற்கத் துவங்கி விட்டார்கள்.
சில ஊர்களில் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் 1000 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியை சேர்ந்த ரசிகர் ஒருவர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவருடன் டிக்கெட் விலை பற்றி விசாரிக்கும் ஆடியோவும் வெளியாகியுள்ளது. அதில் டிக்கெட் விலை 600, 800, 1000 என அந்த மன்ற நிர்வாகி சொல்கிறார்.

இந்த தகவலை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பிரபல சினிமா விமர்சகர் புளூசட்டை மாறன் ‘விஜயின் கடைசி படம் என்பதால் முன்பை விட அதிக விலையில் பிளாக் டிக்கெட் விற்கிறார்கள்.. இதை விற்பவர்கள் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள்.. வாங்குபவர்கள் விஜய் ரசிகர்கள்.. பல வருடங்களாகவே விஜய் படங்களுக்கு இது நடக்கிறது.. ஆனால் விஜய் அமைதியாகவே இருக்கிறார்.. நீங்கள் எல்லாம் சேர்ந்துதான் ஊழலை ஒழிக்க போகிறீர்கள். வெட்கக்கேடு’ என பதிவிட்டிருக்கிறார்.
