நோ டைட்டில்... டயலாக்கே இல்லாமல் மாஸ் ஹிட்டடித்த அஜித்தின் அந்த சூப்பர் திரைப்படம்!..

பில்லாவுக்குப் பிறகு அஜித்தின் ஸ்டைலிஷான இன்னொரு வெர்ஷனை அடையாளப்படுத்திய படம் ஆரம்பம். இந்தப் படத்துக்கு இன்னொரு சிறப்புமே உண்டு. ஒரு கட்டத்தில் படத்துக்கு 'தல’ என்று டைட்டில் வைக்க தயாரிப்பாளர் தரப்பு விரும்பியிருக்கிறது. ஆனால், அஜித் அதை நிராகரித்திருக்கிறார். அதன்பிறகும் சுராங்கனி, அஜித்தின் ஃபேவரைட்டான வி வரிசையில் வலை என பல தலைப்புகளும் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் ஆரம்பம் என்ற டைட்டிலோடு வெளியானது.

பில்லாவின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின் அஜித் - இயக்குநர் விஷ்ணுவர்தன் கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவிக்கப்பட்ட போதே படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியது. படம் அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 மாதங்கள் ஷூட் நடந்துகொண்டிருந்தபோதும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால், படத்தின் டீஸரே டைட்டில் இல்லாமல் தல53 என்கிற டேக்குடன்தான் ரிலீஸ் செய்யப்பட்டது.

அஜித்துடன் நயன்தாரா, ஆர்யா, டாப்ஸி, ராணா என ஸ்டார் கேஸ்டிங் படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. படம் தொடங்கப்பட்டபோது அரவிந்த்சாமி, பிரித்விராஜ் போன்றோரின் பெயர்களும் அடிபட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அது நடக்கவில்லை. அஜித்தின் உண்மையான இனிஷியலான ஏ.கே என்பதைக் குறிக்கும் வகையில் ஹீரோ கேரக்டரின் பெயரும் அசோக் குமார் என்று வைக்கப்பட்டு, சுருக்கமாக ஏ.கே என்று அழைக்கப்படுவார்.

இந்தப் படத்தில் ஒரு காட்சியில் ஐபிஎஸ் அதிகாரியான ஏ.கேவைக் கைது செய்ய போலீஸார் அவரின் வீட்டுக்கு வருவார்கள். கைது செய்ய வரும் போலீஸுக்கும் அவருக்கும் இடையில் ஒரு சில வசனங்கள் வரும் வகையில் கிட்டத்தட்ட இரண்டு பக்கங்கள் கொண்ட டயலாக்குகளை இந்த சீனுக்காக விஷ்ணுவர்த்தன் எழுதி வைத்திருந்தாராம்.

ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததும் விஷ்ணுவர்த்தனுக்கு அதில் திருப்தியில்லையாம். அதனால், டயலாக்கே இல்லாமல் ஆக்‌ஷனில் சொல்லிவிடலாம் என்று யோசித்திருக்கிறார். இதைப்பற்றி அஜித்திடம் சொன்னதும், எப்படி பண்ணலாம் என்று அவர் தயங்கியிருக்கிறார். ஆனால், விஷ்ணுவர்த்தன் நம்பிக்கையோடு பண்ணலாம் சார் என்று சொன்னாராம்.

இதையடுத்து, அந்த போலீஸ் அதிகாரி அஜித்தின் கையைப் பிடிக்க முயலவே, கையில் கண்ணாடியோடு திரும்பி முறைத்தபடி கண்ணாடியை அணிந்துகொண்டு அவர் நடந்துபோகும்படி ஷூட் செய்திருக்கிறார்கள். இந்த காட்சியை மானிட்டரில் பார்த்தவுடன், அந்த இடத்திலேயே விஷ்ணுவர்த்தனை பாராட்டிய அஜித், நிச்சயம் இந்த சீன் வரவேற்பைப் பெறும் என்றும் சொல்லியிருக்கிறார். அதன்படியே, தியேட்டரில் மாஸ் கிளப்பியது அந்த சீன்.

Related Articles
Next Story
Share it