சிவாஜிக்கிட்ட கத்துக்கிட்டது இப்பவும் ஃபாலோ பண்றேன்!... நெகிழும் கமல்ஹாசன்...

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 19:40:53  )
சிவாஜிக்கிட்ட கத்துக்கிட்டது இப்பவும் ஃபாலோ பண்றேன்!... நெகிழும் கமல்ஹாசன்...
X

கமல்ஹாசன் 5 வயதில் சினிமாவில் நடிக்க துவங்கியபோது பெரிய, பிரபலமான ஹீரோவாக இருந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். எனவே, அவரின் மடியில் அமர்ந்து விளையாடும் பாக்கியம் கமலுக்கு கிடைத்தது. நல்லவர்கள், புத்திசாலிகள் மற்றும் திறமையானவர்களின் ஆசிகள் கமலுக்கு கிடைத்ததே அவரின் வெற்றிக்கு முக்கிய காரணம் எனவும் சொல்ல முடியும்.

திறமையானவர்களை தேடிப்பிடித்து நட்புடன் பழகி தன்னை மெருகேற்றிக் கொண்டவர்தான் கமல். அதனால்தான் அவர் உலக நாயகனாக மாறினார். பார்த்தால் பசி தீரும் படத்தில் சிறுவனாக சிவாஜியுடன் நடித்திருப்பார். சிவாஜி பார்த்து வளர்ந்தவராகத்தான் கமல் இருந்தார்.

சிவாஜியும் தனது மனதில் கமலுக்கு முக்கியமான இடம் கொடுத்திருந்தார். ‘இவன் என் மகன்’ என்றே எல்லோரிடமும் சொல்வார். அதன் மூலம் தன்னுடைய கலை வாரிசு கமல்தான் என்பதை சொல்லாமல் சொன்னார் நடிகர் திலகம். சில படங்களில் சிவாஜியுடன் கமல் நடித்திருந்தாலும் அதில் முக்கியமான படம் தேவர் மகன்.

கமலுக்கு மட்டுமல்ல. ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த படம் அதுதான். இந்த படத்தில் இருவரும் அப்பா - மகனாக நடித்திருப்பார்கள். எந்த ஊடகத்தில் பேட்டி கொடுத்தாலும் கமலிடம் தேவர் மகன் பற்றி கண்டிப்பாக ஒரு கேள்வி கேட்கப்படும். சமீபத்தில் இந்தியன் 2 புட புரமோஷன் விழாவில் கலந்து கொண்ட கமல் சிவாஜியுடனான தனது உறவு பற்றி பகிர்ந்துகொண்டார்.

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடும்போது சிவாஜியின் வீட்டுக்கு வெளியே நின்று பார்த்து ‘ஒருநாள் இந்த வீட்டுக்குள் நான் போவேன்’ என ஆசைப்பட்டேன். பின்னாளில் என்னை மகனாக அங்கீகரித்தார் நடிகர் திலகம். பிரபு அதை ஏற்றுக்கொண்டதுதான் பெருந்தன்மை. இவர்தான் என் அண்ணன் என எல்லோரிடமும் சொல்வார்’. அதெல்லாம் எனக்கு பெரிய ஆச்சர்யம்.

உத்தமபுத்திரன் படத்தில் வரும் யாரடி நீ மோகினி பாடலுக்கு பிரம்மாதமாக நடனமாடி இருப்பார் சிவாஜி. ‘இதை எப்படி செய்தீர்கள்?’ என அவரிடம் கேட்டேன். அதற்கு அவர் ‘அந்த பாடலில் ஆடியது நான் இல்லை. ஹீராலால்’ என்றார். அந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் ஹீராலால். தன்னுடைய பெருமையை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்பவனே உண்மையான கலைஞன் என எனக்கு சொல்லி கொடுத்தார். அதோடு, அடுத்தநாள் நடன சங்க உறுப்பினர்களோடு என்னையும் அழைத்துகொண்டு அவரை பார்க்க போனார். எல்லோரும் ஹீராலால் காலில் விழுந்தனர். நடிகன் இங்கே எதையும் தனியாக செய்ய முடியாது. நல்ல நடிகர் அருகில் இல்லாமல் ஒருவர் எப்படி தனியாக நடிக்க முடியும்’ இதைத்தான் நான் சிவாஜி சாரிடம் கற்றுக்கொண்டேன்’ என கமல் சொல்லி இருந்தார்.

Next Story