Connect with us

Flashback

பாட முடியாமல் காய்ச்சலால் அவதிப்பட்ட எஸ்.பி.பி… எம்ஜிஆர் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

எந்த நிலைமை வந்தாலும் கலைஞன் கஷ்டப்படக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர் தான் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.!

பாடும் நிலா பாலு என்று அழைக்கப்படும் பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவர் 80 மற்றும் 90 காலகட்டத்தில் தமிழ்சினிமா ரசிகர்களைத் தன்னகத்தே ஈர்ப்புடன் வைத்து இருந்தார். அவரது குரல் அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்.

அந்த வகையில் அருமையாக இருக்கும். குறிப்பாக அவர் ரஜினிக்குப் பாடினால் அவரோட வாய்ஸ் மாதிரி இருக்கும். கமலுக்குப் பாடினால் கமல் வாய்ஸ் மாதிரி இருக்கும்.

மோகனுக்குப் பாடினால் மோகன் வாய்ஸ் மாதிரி இருக்கும். ஆனால் அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருக்கும் பாடியுள்ளார். அது தான் அவரது முதல் பாடலும் கூட.

அது என்ன பாடல்? அதற்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி? அந்தப் பாடலைப் பாடுவதற்குள் எத்தகைய சிரமங்களை அனுபவித்தார் என்று பார்ப்போம். இதை எஸ்பிபி.யே பேட்டி ஒன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.

ஒருமுறை தமிழ் பாடலை தெலுங்கு டப்பிங்கிற்காகப் பாடிக் கொண்டு இருந்தேன். அதைக் கேட்ட எம்ஜிஆர் ‘இது நம்ம படத்தின் பாடலா இருக்கே. யாரு பாடினான்னு பார்த்துட்டு வா’ன்னு சொல்லி ஒருவரை அனுப்பினார்.

அவரும் பார்த்து விட்டு வந்து தெலுங்கு டப்பிங் வேலை நடக்கிறது என்றார். அதன்பிறகு சிறிது நாள்களுக்குப் பிறகு அடிமைப்பெண் படத்தின் இசை அமைப்பாளர் கே.வி.மகாதேவனிடம் என்னைப் பற்றி விசாரித்து வர அனுப்பினார்.

அதற்கு கே.வி.மகாதேவன் ‘அந்தப் பையன் நல்லா பாடக்கூடியவன்’ என்று சொல்கிறார். உடனே ‘அவனுக்கு இந்தப் பாடலைப் பாட வாய்ப்பு கொடுங்கள்’ என்று எம்ஜிஆர் கூறினார். ராமாவரம் தோட்டத்தில் ரிகர்சல். சுசிலா அம்மாவுடன் பாடுகிறேன்.

4 நாள்கள் முடிந்து ரெக்கார்டிங்கிற்குத் தயாரானோம். ஆனால் திடீரென எனக்கு டைபாய்டு காய்ச்சல் வந்துவிட்டது. படுத்த படுக்கை ஆனேன். என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்தேன். அப்போது படத்தயாரிப்பாளர் வந்தார். எம்ஜிஆரின் பாடலைப் பாட ஒவ்வொருவரும் தவம் கிடக்கிறாங்க. உனக்கு இப்படி ஆகிவிட்டதே என்று வருந்தினார்.

‘என் தலைவிதி அவ்ளோ தான்’னு நினைத்து நொந்து கொண்டேன். 15நாள்கள் கழிந்தது. எம்ஜிஆர் ஒருவரை அனுப்பி பார்த்துவிட்டு வருமாறு கூறியுள்ளார். அவரும் வந்து பார்க்க, ‘இன்னும் 5 நாள்களில் நான் பாடத் தயாராகி விடுவேன்’னு சொன்னேன். அதே மாதிரி அவர்களும் 5 நாள் கழித்து ரெக்கார்டிங்க் வைத்தார்கள். நான் பாடினேன். அதன்பிறகு எம்ஜிஆரிடம் எனக்காக ஏன் இப்படிச் செய்தீர்கள் என கேட்டேன்.

அதற்கு நீ என்ஜினீயரிங் படிக்கிற பையன். உன் ப்ரண்ட்ஸ்கள் கிட்டே எல்லாம் எனக்குப் பாடப்போவது பற்றி சொல்லி இருப்ப. திடீர்னு பாட முடியாமப் போனா அவங்க உன்னைத் தப்பா நினைச்சிருப்பாங்க. அதனால தான் வெயிட் பண்ணினேன் என்று சொன்னாராம் எம்ஜிஆர். அதைக் கேட்ட எஸ்பிபி நெகிழ்ந்து போனாராம். அந்தப் பாடல் தான் எஸ்பிபி. முதன்முதலாகப் பாடிய ஆயிரம் நிலவே வா பாடல்.

இப்போது கேட்டாலும் சுகமாக இருக்கும். இந்தப் பாடலுக்கு முன்பே சாந்தி நிலையம் படத்திற்காக ‘இயற்கை என்னும் இளையகன்னி’ என்ற பாடலைப் பாடினார். ஆனால் எம்ஜிஆர் படம் முந்திக்கொண்டு முதலாவதாக ரிலீஸ் ஆகிவிட்டது. அதனால் எம்ஜிஆருக்காகப் பாடிய பாடல் எஸ்பிபியின் முதல் பாடல் ஆனது.

google news
Continue Reading

More in Flashback

To Top