ஒரே படத்தில் மூன்று விதமான குரல்களில் பாடிய டி.எம்.எஸ்!. உலகத்திலேயே இவர்தானாம்!..

50களில் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தவர்தான் டி.எம்.சவுந்தரராஜன். சில பக்தி படங்களில் நடித்தார். ஆனால், ‘நடிப்பு வேண்டாம். உங்கள் குரலை மட்டும் கொடுங்கள்’ என சொல்லி வாங்கிக் கொண்டது திரையுலகம். துவக்கத்தில் எம்.ஜி.ஆருக்கும், சிவாஜிக்கும் வேறு சில பின்னணி பாடகர்கள்தான் பாடி வந்தனர்.

ஆனால், அவர்கள் இருவருக்கும் டி.எம்.எஸ் பாட துவங்கிய பின் வேறு ஒருவர் பக்கம் அவர்கள் இருவரும் போகவே இல்லை. பல நூறு பாடல்களை இருவருக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். அதற்கு முக்கிய காரணம் எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருக்கும் டி.எம்.எஸ் குரல் நூறு சதவீதம் பொருந்தும்.

மேலும், எம்.ஜி.ஆருக்கும் ஒரு மாதிரியும், சிவாஜிக்கு ஒரு மாதிரியும் பாடுவார் டி.எம்.எஸ். அந்த டெக்னிக் என்னவென்பது அவருக்கு மட்டுமே தெரியும். அதனால்தான், தங்களின் படங்களில் எல்லா பாடல்களை டி.எம்.எஸ் மட்டுமே பாடவேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் - சிவாஜி இருவரும் உறுதியாக இருந்தார்கள்.


பல அற்புதமான காதல், தத்துவ, சோக, புரட்சிப் பாடல்களை இருவருக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆர் - சிவாஜி மட்டுமல்ல. நாகேஷ், முத்துராமன், அசோகன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன் என பலருக்கும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். எம்.ஜி.ஆருக்கு புரட்சி பாடல்கள் எனில் சிவாஜிக்கு சோக, தத்துவ பாடல்களை பாடி அசத்தியிருக்கிறார்.

ஏவிஎம் தயாரிப்பில் சிவாஜி இரட்டை வேடங்களில் நடித்து உருவான திரைப்படம்தான் உயர்ந்த மனிதன். இந்த படத்தில் ஒரு சிவாஜிக்கு வாணிஸ்ரீ, வயதான சிவாஜிக்கு சவுகர் ஜானகியும் ஜோடியாக நடித்திருப்பார்கள். மேலும், சிவக்குமார் இந்த படத்தில் சிவாஜியின் மகனாக நடித்திருந்தார்.

இந்த படத்தில் சிவாஜி இளமையாக இருக்கும்போது ‘வெள்ளிக்கிண்ணம்தன் தங்க கைகளில்’ என பாடியிருப்பார் டி.எம்.எஸ். அதே சிவாஜி வயதான பின் ‘அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே’ என் குரலை மாற்றி பாடியிருப்பார். அதேபோல், சிவாஜியின் மகன் சிவக்குமார் பாடும் ‘என் கேள்விக்கென்ன பதில்’ பாடலை மிகவும் சன்னமான குரலில் ஒரு வாலிபருக்கு பொருந்துவது போல பாடியிருப்பார் டி.எம்.எஸ்.

முதலில் 'என் கேள்விக்கென்ன பதில்’ பாடலை சிவாஜிக்கு என நினைத்தே பாடியிருக்கிறார் டி.எம்.எஸ். ஆனால், இந்த பாடல் சிவக்குமார் ஒரு புது பையனுக்கு என மறைந்த ஏவி மெய்யப்ப செட்டியார் சொன்னதால் படப்பிடிப்புக்கு போய் சிவக்குமாரை பார்த்துவிட்டு அவரின் வயது மற்றும் இளமைக்கு பொருந்துவது போல் மீண்டும் பாடியிருக்கிறார் டி.எம்.எஸ்.

இப்படி உலகிலேயே ஒரு திரைப்படத்தில் கதாபாத்திரங்களுக்கு 3 விதமாக குரலை மாற்றி பாடிய ஒரு பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜான் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles
Next Story
Share it