Arjun: அதுமட்டும் நடந்திருந்தா நானும் ஆர்மி ஆஃபிஸரா ஆகியிருப்பேன்.. மிஸ்ஸான வருத்தத்தில் அர்ஜுன்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:20  )

Arjun: ஆக்சன் கிங் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ஒரு முன்னணி நடிகராக திகழ்ந்தவர். இவருடைய படங்கள் பெரும்பாலும் தேசப்பற்று மிக்க படங்களாகவே வெளிவந்திருக்கின்றன. குறிப்பாக எல்லா படங்களிலும் அர்ஜுன் ஒரு போலீஸ் அதிகாரியாகவே நடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.

அடிப்படையில் அர்ஜுன் ஒரு தேசப்பற்று மிக்க நடிகராகவும் இருப்பவர். அதனால் தான் என்னவோ ஆகஸ்ட் 15ஆம் தேதி இவருடைய பிறந்தநாள். எந்த ஒரு விழா மேடையானாலும் பேச்சை முடித்துவிட்டு ஜெய்ஹிந்த் என்று சொல்வது அர்ஜுனின் வழக்கம். அந்த அளவுக்கு இந்தியாவை நேசிக்கும் ஒரு தேசப்பற்று மிக்க நடிகராக திகழ்ந்து வருகிறார் அர்ஜுன்.

சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அர்ஜுன் பல படங்களை தயாரிக்கவும் செய்கிறார். அதே நேரம் இயக்குனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் அமரன் திரைப்படம் வெளியானதிலிருந்து அதனுடைய தாக்கம் மக்கள் மனதை விட்டு நீங்கவில்லை. படத்தைப் பார்த்த பெரும்பாலான தாய்மார்கள் நாங்களும் எங்கள் மகனை ஆர்மியில் சேர ஆசைப்படுகிறோம் என்று கூறுவதை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு அமரன் படத்திற்கு முன்பாகவே அர்ஜுன் அவருக்கு உண்டான மரியாதையை கொடுத்திருக்கிறார். 10 வருடங்களுக்கு முன்பு அதாவது மேஜர் முகுந்த் வரதராஜன் இறந்த ஐந்தாவது மாதத்தில் அர்ஜுன் நடித்த ஜெய்ஹிந்த் படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நேரம்.

அந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு உண்டான மரியாதையை செலுத்தினார் அர்ஜுன். அது மட்டுமல்ல அந்தப் படத்தின் ஆடியோ கேசட்டை அந்த குடும்பத்தை வைத்து தான் ரிலீஸ் செய்தார். இந்த நிலையில் அர்ஜுனுக்கும் ஆர்மியில் சேர ஆசை இருந்ததாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

அதற்கான அப்ளிகேஷன் ஃபார்மை எடுத்துக்கொண்டு அவருடைய அம்மாவிடம் கையெழுத்து வாங்க சென்றாராம். அதில் பெற்றோர்கள் கையெழுத்து போட வேண்டிய ஒரு இடத்தில் ‘உயிருக்கு என்ன ஆனாலும் நாங்களே பொறுப்பு’ என எழுதி இருந்ததை பார்த்துவிட்டு அவருடைய அம்மா கையெழுத்து போட மறுத்துவிட்டாராம். அதை பார்த்ததுமே அவருடைய அம்மா அழுதுவிட்டாராம். இல்லைன்னா நானும் ஆர்மில தான் இருந்திருப்பேன் என அந்த பேட்டியில் அர்ஜுன் கூறியிருக்கிறார்.

Next Story