Amaran: உலகம் முழுவதும் அமரன் செய்த மெகா வசூல்!.. இந்தியாவில் மட்டும் இத்தனை கோடியா?!...
Amaran: பொதுவாக ஒருவரின் உண்மை கதை சினிமாவாக மாறும்போது பெரிய வசூலை பெறாது. இதற்கு பல உதாரணங்கள் உண்டு. ஆனால், அமரன் திரைப்படம் அதை உடைத்திருக்கிறது. இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் மரணமடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் பற்றிய கதை இது.
முகுந்த் வரதராஜன் சென்னையை சேர்ந்தவர். கேரளாவை சேர்ந்த இந்து ரெபகா வர்கீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உண்டு. தமிழின் மீது அதிக ஆர்வம் கொண்டவர் முகுந்த். குறிப்பாக பாரதியார் பாடல் வரிகளை மிகவும் நேசித்தவர்.
தனது குழந்தைக்கு ‘அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே’ என அவர் சொல்லிக்கொடுக்கும் வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் எப்படி ராணுவத்தில் சேர்ந்தார்.. அவரின் திருமண வாழ்க்கை.. தீவிரவாதிகளை எப்படி சுட்டு வீழ்த்தினார்.. அவருக்கு மரணம் எப்படி நிகழ்ந்தது?.. என எல்லாமும் அமரன் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.
குறிப்பாக முகுந்த் ராணுவத்தில் எவ்வளவு சிறப்பாக பணியாற்றினார் என பல காட்சிகளில் காட்டப்பட்டிருக்கிறது. ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்க, முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்து ரெபகா வேடத்தில் சாய் பல்லவி நடித்திருக்கிறார்.
இந்த படம் உலகம் முழுவதும் கடந்த 31ம் தேதி வெளியானது. தீபாவளி விருந்தாக வெளியான இந்த திரைப்படம் உலகமெங்கும் வசிக்கும் தமிழர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. படம் வெளியாகி 3 நாட்களில் 100 கோடியை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
இந்நிலையில், படம் வெளியாகி 6 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் அமரன் திரைப்படம் உலகமெங்கும் 170 கோடியையும், இந்தியாவில் 110 கோடியை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படங்களில் அமரன் படமே அதிக வசூலை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.