இதுவரை தமிழ்ப்படம் செய்யாத சாதனையை நிகழ்த்தும் அமரன்... தயாரிப்பாளர் உலகநாயகன் ஆச்சே!
ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் அமரன். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். சிவகார்த்திகேயனுக்கு இது 21வது படம். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னை, புதுச்சேரி, காஷ்மீர் போன்ற இடங்களில் நடைபெற்றது.
வரும் தீபாவளி அன்று (31.10.2024) ரிலீஸ் ஆகிறது. இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் படத்திற்கான புரொமோஷன் பணிகள் தொடஙகப்பட்டுள்ளது. இதற்காக சமீபத்தில் மலேசியாவுக்கு சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் சென்றார்கள்.
தற்போது படத்தின் தயாரிப்பாளரான கமல் அமெரிக்காவில் இருக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் குறித்துக் கற்றுக் கொள்ள சென்றதாகக் கூறப்பட்டு வருகிறது. அதனால் அமரன் படத்தின் டீம் அடுத்ததாக பட புரொமோஷனுக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறதாம். இன்னும் சில தினங்களில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாக உள்ளதாம். இதுவரை எந்தத் தமிழ்ப்படமும் அங்கு சென்று புரொமோஷன் பண்ணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேஜர் முகுந்த வரதராஜனின் உண்மைக்கதையைப் படமாக்கி இருக்கிறார்கள். அது தான் அமரன். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேயன் பல காட்சிகளில் மெனக்கிட்டு நடித்துள்ளார். அவரது அர்ப்பணிப்பு படத்தின் மேக்கிங் வீடியோ, டீசரில் தெரிகிறது. பனிபடர்ந்த மலைப்பிரதேசங்களில் படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
சிவகார்த்திகேயன் ராணுவ உடையில் மிடுக்காக நடந்து வருவதும், துப்பாக்கியுடன் அவர் போரிடும் காட்சிகளும் தெறிக்க விடுகின்றன. இதற்காகப் பல பயிற்சிகளை முறைப்படிக் கற்றுள்ளார் சிவகார்த்திகேயன். 'போர் செல்லும் வீரன்' என்ற பாடல் கமலின் கம்பீரமான குரலில் கர்ஜிக்கிறது. கமலுடன் முதன்முறையாக சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி தினத்தில் வருவதால் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படத்திற்குப் பிறகு தமிழ்சினிமாவில் மார்கெட் எகிறி விடும் என்கிறார்கள். இப்போதே விஜய்க்கு அடுத்ததாக இவர் தான் என்று பலரும் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கோட் படத்திலும் கூட இவர் கேமியோ ரோலில் வந்து இருந்தார்.