82 வயசு ஆச்சுன்னு நினைக்காதீங்க!.. நான் வேறமாறி!.. சீறும் சிம்பொனி இளையராஜா..

Ilayaraja Symphony: இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில் லண்டன் சென்று சிம்பொனியை இசை நிகழ்ச்சியை நடத்திவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார் இசைஞானி இளையராஜா. சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அரசு மரியாதை கொடுக்கப்பட்டு வரவேற்றார்கள். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:
என்னை மலர்ந்த முகத்துடன் வாழ்த்தி அனுப்பி வைத்தீர்கள். அதுவே சிம்பொனியை இசை சரியாக நடக்க இறைவன் அருள் புரிந்தான். நான் சென்று ஒருநாள் ரிகர்சல் பார்க்க மட்டுமே நேரம் இருந்தது. சிம்பொனி இசைக்கான நோட்ஸை எழுதிவிடலாம். ஆனால், எல்லோரும் சரியாக வாசிக்க வேண்டும். 80 பேர் வாசிக்கும்போது தவறு நேர்ந்துவிடக்கூடாது.
சிம்பொனி மொத்தம் 4 பகுதிகளாக இருக்கும். பொதுவாக 4 பகுதிகளும் முடிந்த பின்னரே கைத்தட்டுவார்கள். அதுதான் விதிமுறையும் கூட. ஆனால், இந்த சிம்பொனி நடந்த போது ஒவ்வொரு பகுதி முடிந்த பின்னரும் அங்கிருந்த ரசிகர்கள் கை தட்டினார்கள். அவர்களால் தங்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த அளவுக்கு இசை அவர்களை வசீகரித்துவிட்டது. நானும் அவர்களோடு சேர்ந்து பாடினேன். அது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது.
பண்ணைபுரத்திலிருந்து வெறும் காலோடு நடந்து வந்தவன் இப்போது இந்தியாவுக்கு பெருமை சேர்த்திருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் என்னுடைய சொந்த காலில்தான் நின்றேன். இப்போதும் நிற்கிறேன். என்னை அரசு மரியாதோடு வரவேற்ற தமிழக முதல்வருக்கு என் நன்றி.ரசிகர்கள் என்ன இசை தெய்வம் என்றெல்லாம் அழைக்கிறார்கள். ஆனால், நான் சாதாரண மனிதன்தான். என்னை அப்படி அழைக்கும்போது இறைவனை எனது ரேஞ்சுக்கு கீழே இறக்கிவிட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.
எனக்கு 82 வயது ஆகிவிட்டது என நினைக்க வேண்டாம். நீங்கள் நினைக்கும் அளவுக்குள் நான் இல்லை. இது ஆரம்பம் மட்டுமே. இந்த சிம்பொனி இசை இன்னும் பல நாடுகளில் நடக்கவிருக்கிறது. அதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும். என்னை இளைஞர்கள் முன் உதாரணமாக கொண்டு அவரவர் துறைகளில் நிறைய சாதனைகளை செய்து தமிழ்நாட்டுக்கும்,. இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே என் ஆசை. எல்லோருக்கும் நன்றி’ என பேசியிருந்தார்.
சிம்பொனி இசை அமைத்துவிட்டு வந்த இளையராஜாவுக்கு இசையமைப்பாளர்களும், ரசிகர்களும் தொடர்ந்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். செய்தியாளர்களிடம் பேசிய போது ‘சிம்பொனியை இசையை நீங்கள் டவுன்லோட் செய்து கேட்கக் கூடாது. அதன் நிஜமான உணர்வை நேரில் அனுபவித்தால் மட்டுமே உங்களால் உணர முடியும்’ என்றும் அவர் பேசியிருந்தார்.