வசூலில் மாஸ் காட்டும் தேவரா!... 10 நாட்களில் இவ்வளவு கோடியா?....
என்.டி.ராமாராவின் பேரன்தான் இந்த ஜூனியர் என்.டி.ஆர். அவரது குடும்பத்தில் பலரும் சினிமாவில் இருந்ததால் இவருக்கும் நடிகராக வேண்டும் என்கிற ஆசை வந்தது. துவக்கத்தில் மிகவும் குண்டாக இருந்தார். அதன்பின் படிப்படியாக உடல் எடையை குறைத்தார். ஆக்ஷன் படங்களில் மட்டுமே நடிப்பார்.
பாகுபலி புகழ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான ஆர்.ஆர்.ஆர். படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தில் இவரும், ராம் சரணும் சேர்ந்து நடனமாடிய நாட்டுக்குத்து பாடலுக்கு ஆஸ்கர் விருதும் கொடுக்கப்பட்டது. சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான படம் தேவரா.
இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வெளியானது. இந்த படத்தை தெலுங்கில் மசாலா படங்களை இயக்கி வரும் கொரட்டால சிவா இயக்கியிருந்தார். வழக்கம்போல், தெலுங்கு சினிமா எப்படி இருக்குமோ அப்படி ஒரு பக்கா ஆக்ஷன் மற்றும் மசாலா படமாக இப்படத்தை உருவாக்கியிருந்தனர். இந்த படத்தில் ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்தார்.
இந்த படம் 2 பாகங்களாக உருவாகியிருக்கிறது. இதில், முதல் பாகம் கடந்த செப்டம்பர் 27ம் தேதி வெளியானது. ஆந்திராவில் நல்ல வசூலை பெற்றாலும் தமிழில் இப்படம் வரவேற்பை பெறவில்லை. இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை வினியோகஸ்தர் ஒருவர் 8 கோடிக்கு வாங்கிய ஒன்றரை கோடி விளம்பரம் செய்து இப்படத்தை வெளியிட்டார்.
ஆனால், தமிழகத்தில் இப்படம் ஒன்றரை கோடி மட்டுமே வசூல் செய்தது. ஆனால், ஆந்திராவிலும், வெளிநாட்டில் வசிக்கும் ஆந்திரா மக்களிடமும் இப்படம் நல்ல வசூலை பெற்றது. ஹைதராபாத்தில் இந்த படம் வெளியான ஒரு தியேட்டரில் ஜூனியர் என்.டி.ஆரின் கட் அவுட் தீப்பற்றி எரிந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தேவரா திரைப்படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் உலக அளவில் 466 கோடியை வசூல் செய்திருப்பதாக படக்குழு அறிவித்திருக்கிறது.