அப்பா கதையை படமாக்கும் மாரி செல்வராஜ்… எண்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோ…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:32:24  )

Mari selvaraj: இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து ஒரு உண்மை சம்பவம் தற்போது படமாக்கப்பட இருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

பிரபல இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக இருந்தவர் மாரி செல்வராஜ். தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனராக கோலிவுட்டிற்குள் அடியெடுத்து வைத்தார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.

அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இப்படம் மாறியது. தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கினார். அப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுகளை பெற்றது. தொடர்ச்சியாக வசூலையும் குவித்தது.

இப்படங்களை தொடர்ந்து வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து நடித்த மாமன்னன் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தில் எப்போதும் சிரித்து காமெடி செய்யும் வடிவேலுவை சீரியஸான ஆளாகவும், சிரித்துக்கொண்டே இருந்த ஃபகத் ஃபாசிலை மிரட்டல் வில்லனாகவும் காட்டி அசர அடித்தார்.

இப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜின் வாழ்க்கை கதையிலிருந்து வாழை திரைப்படத்தை தயாரித்து இயக்கினார். அப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது துருவ் விக்ரம் நடிப்பில் பைசான் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்த திரைப்படத்தில் கார்த்தி இணைய இருப்பதாக பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் உறுதி செய்து இருக்கிறார். மாரி செல்வராஜின் தந்தை வாழ்க்கையில் நடந்த கதையை படமாக எடுக்க இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.

இப்படத்தின் ஒன் லைனை கார்த்தியிடம் ஏற்கனவே மாரி செல்வராஜ் தெரிவித்து இருப்பதாகவும், அதற்கு கார்த்தி ஒப்புக் கொண்டுள்ள நிலையில் விரைவில் இப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஷூட்டிங்கும் இந்த வருடம் கடைசியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

Next Story