எல்லா தியேட்டரிலும் ஹவுஸ்புல்!. ஆன்லைன் புக்கிங்கில் வேட்டையாடும் வேட்டையன்!..
Vettaiyan: ஜெய்பீம் படத்தை இயக்கிய தா.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம்தான் வேட்டையன். ஜெயிலர் எனும் மெகா ஹிட்டுக்கு பின் ரஜினி நடித்திருக்கும் திரைப்படம் இது. சமூக பிரச்சனைகளை பேசும் ஞானவேலும், மாஸ் படங்களில் நடிக்கும் ரஜினியின் ஒன்னு சேர்ந்ததால் இது எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.
வேட்டையன் பட இசை வெளியீட்டு விழாவில் இதற்கு பதில் சொன்ன ஞானவேல் என்னுடைய கதையில் ரஜினி சாருக்கு ஏற்றார் போல காட்சிகளை அமைத்திருக்கிறேன் என சொல்லி இருக்கிறார். இந்த விழாவில் பேசிய ரஜினியோ ‘மீண்டும் கமர்ஷியல் படமென்றால் நான் நெல்சன் அல்லது லோகேஷிடமே போயிருப்பேன். வேட்டையன் சமூக பிரச்சனையை பேசும் படம்’ என சொல்லி இருந்தார்.
இந்த படத்தில் ரஜினியின் நீண்ட வருட நண்பரான அமிதாப்பச்சனும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், ராணா, பஹத்பாசில், துஷரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். காவல் துறையில் நிகழும் என்கவுண்ட்டர் மற்றும் கல்வியை வியாபாரமாக்கும் மாபியா கும்பல் பற்றியும் இப்படத்தில் பேசியிருக்கிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியானது. வருகிற 10ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளதால் இந்தியாவிலும் ,வெளிநாடுகளிலும் முன்பதிவு துவங்கிவிட்டது. வெளிநாட்டில் வேட்டையன் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் மட்டும் 1.5 மில்லியன் டாலர் அளவுக்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், தமிழகத்திலும் சென்னை, கோவை போன்ற நகரங்களில் ரசிகர்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். 10ம் தேதி வியாழக்கிழமை படம் வெளியாகிறது. வெள்ளி, சனி இரண்டு நாளும் ஆயுத பூஜை, அடுத்த நாள் ஞாயிறு என தொடர் விடுமுறை வருவதால் 4 நாட்களில் இப்படம் நல்ல வசூலை பெற்றுவிடும் என கணிக்கப்படுகிறது.
சென்னையில் பல தியேட்டர்களிலும் தியேட்டர்கள் ஹவுஸ் புல்லாகி வருகிறது. இது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.