ஹோட்டல்ல டேபிள் துடைச்சேன்!.. ஆனா வருத்தப்படல!.. எஸ்.ஜே.சூர்யா எமோஷனல் பேட்டி!..

சினிமாவில் நடிப்பு மற்றும் இயக்கம் என இரண்டுக்குமே வாய்ப்பு கிடைப்பது என்பது சுலபமில்லை. நடிகராக அறிமுகமாக வேண்டுமெனில் பிரபலமான மற்றும் பல வெற்றிப்படங்களை கொடுத்த ஒரு நடிகரின் மகனாக இருக்க வேண்டும். இல்லையெனில் பிரபல தயாரிப்பாளர் அல்லது இயக்குனரின் மகனாக இருக்க வேண்டும்.

இப்படி எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் திரையுலகில் நுழைந்து ஒரு இடத்தை பிடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. பல வருட உழைப்பும், நம்பிக்கையும் வேண்டும். ஒரு இயக்குனரோ, நடிகரோ அல்லது தயாரிப்பாளரோ நம்ப வேண்டும். வாய்ப்பு கிடைக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தாலும் நிரூபித்து வெற்றி பெற்று காண்பிக்க வேண்டும்.

அப்படி நிரூபித்து காட்டியவர்தான் எஸ்.ஜே.சூர்யா. வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அதற்கு பின் சில இயக்குனர்களிடமும் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறார். பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர கடைசி வர முயற்சி செய்து தோற்றுப்போனார்.

ஆசை படத்தில் வேலை செய்தபோது அஜித்துடன் பழக்கம் ஏற்பட்டு அப்படி உருவான படம்தான் வாலி. இந்த படம் ஹிட் அடிக்கவே அடுத்து விஜயை வைத்து குஷி படத்தை இயக்கினார். அந்த படமும் சூப்பர் ஹிட். அதன்பின் சில படங்களை இயக்கி அவரே ஹீரோவாக நடித்தார்.

ஒருகட்டத்தில் மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்க துவங்கி இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார். மாநாடு, மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்கள் எஸ்.ஜே.சூர்யாவை ஒரு பிஸியான நடிகராக மாற்றிவிட்டது. இப்போது அவரின் கையில் பல படங்கள் இருக்கிறது.

உதவி இயக்குனராக மாறுவதற்கு முன் சில ஹோட்டல்களில் வேலை செய்திருக்கிறார். இதுபற்றி ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘ஹோட்டலில் டேபிள் துடைத்ததற்காக நான் வருத்தப்படவில்லை. அப்போது அதுதான் என் வேலை. அதை சரியாக செய்ய வேண்டும் என நினைத்தேன். இப்போது நடிக்கிறேன். இப்போது இது என் வேலை. இதற்காக எனக்கு பணம் கொடுக்கிறார்கள். இடம்தான் மாறுகிறதே தவிர வேலை என்பது ஒரே அளவுதான்’ என உருக்கமாக பேசியிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

Related Articles
Next Story
Share it