More
Categories: Cinema History Cinema News latest news

யாரென தெரியாத மக்கள்! பாஷையே தெரியாமல் ஆட்டம் போட்ட தனுஷ்… சுள்ளான் சூப்பருப்பா..!

நடிகர், பாடகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பல்துறை வித்தகராகத் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை காலத்தில் உருவ கேலியால் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர், இன்று ஹாலிவுட் வரை தனது கொடியை நாட்டியிருக்கிறார்.  இதுவரை 46 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் அவர், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தலா 4 தேசிய விருதுகளையும் வென்றிருக்கிறார். 

2002-ல் தமிழ் சினிமாவில் காலடியெடுத்து வைத்த அவருக்கு உடனடியாக வெற்றிகள் ஒன்றும் கைகூடவில்லை. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு 2007-ல் வெளியான பொல்லாதவன் படம்தான் அவருக்கு பிரேக் கொடுத்தது. அங்கிருந்து அவரது பயணம் மலைக்க வைக்கக் கூடியது. ஆன்மீகவாதியான தனுஷ், ஒவ்வொரு படத்துக்கும் அந்த கதாபாத்திரத்துக்காகவும் போடும் உழைப்பு அப்படிப்பட்டது.

இதையும் படிங்க: சீனுராமசாமி அப்படி பட்டவர்தான்!… களத்தில் இறங்கி காலி செய்த மனிஷா யாதவ்..

அதேபோல், 2011-ல் தனுஷ் தானே எழுதி பாடிய வொய் திஸ் கொலவெறிடி பாடல் அவரை வேறோரு உயரத்துக்கு அழைத்துச் சென்றது. காரணம் தமிழ் இணைய உலகில் 100 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்ற முதல் பாடல் அதுதான். 2013-ல் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா படம் மூலம் பாலிவுட்டிலும் நடிகராகக் கால்பதித்தார். அந்தப் படத்தில் ஒருதலைக் காதல் நாயகனாகப் பட்டையைக் கிளப்பிய அவருக்கு, சிறந்த அறிமுக நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது கிடைத்தது.

அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வேறு யாருமல்ல, கர்ணன் படத்தில் வில்லன் வேடமேற்றிருந்த நடிகர் நட்டிதான். அவர்தான் ராஞ்சனா உள்பட பல பெரிய பாலிவுட் படங்களுக்கு ஒளிப்பதிவாளர். ராஞ்சனா ஷூட்டிங் சமயத்தில் ஒருநாள் வாரணாசியில் இருந்து 30-40 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு படப்பிடிப்புக்காக சென்றிருக்கிறார்கள். அந்த காட்சியின்படி ஹீரோ தனுஷ், தனது காதலை ஹீரோயின் சோனம் கபூரிடம் சொல்ல வேண்டும். அவர் திரும்பிச் செல்கையில் வழிமறித்து பின்னணியில் ஒலிக்கும் ஒரு பழைய ஹிந்திப் பாடலுக்கு நடனம் ஆட வேண்டும். 

இதையும் படிங்க: அந்த நடிகையை மன்சூர் பேசியபோது சிரிச்சீங்க!. இப்ப மட்டும் கோபம் ஏன்?.. வெளுத்து வாங்கும் பத்திரிக்கையாளர்.

அந்த காட்சி ஷூட் செய்யப்பட்ட கிராமத்தில் அதுவரை படப்பிடிப்பு எதுவுமே நடந்திராத நிலையில், விஷயத்தைக் கேள்விப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு கூடியிருக்கிறார்கள். இதெல்லாம் விட பின்னணியில் ஒலித்த அந்த ஹிந்தி பாடலில் வரிகள் என்ன, அதற்கு என்ன அர்த்தம் என்று கூட தனுஷுக்குத் தெரியாதாம். இயக்குநர் அதைப் பத்திச் சொல்லலாம் என்று முயற்சித்தபோது, `வேண்டாம் சார். நான் ரிதத்தைக் கேட்டு ஸ்டெப் போட்டுடுறேன்’ என்று சொல்லியிருக்கிறார் தனுஷ்.

இன்னும் சொல்லப்போனால், அந்த காட்சிக்கு நடனம் அமைக்கக் கூட எந்தவொரு நடன இயக்குநரும் இல்லாத நிலைமையில், அந்தப் பாடலுக்கு ஏற்றபடியே சிறப்பாக நடனம் ஆடி முடித்திருக்கிறார் தனுஷ். அவர் ஆடி முடித்ததும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் கைதட்டி ஆராவாரம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு தனுஷை யாரென்றே தெரியாத நிலையில், அவரது நடனத்தைப் பாராட்டி கைதட்டல்களைப் பரிசளித்திருக்கிறார்கள்.

Published by
Akhilan

Recent Posts