படம் 50 லட்சம் நஷ்டம்!. ஆனா 1.5 கோடி லாபம்!. இளையராஜா செய்த மேஜிக்!...

Ilayaraja: 80களில் பல திரைப்படங்கள் ஓடியதற்கு காரணம் இளையராஜா. இயக்குனர்கள் தங்களின் படம் வெற்றியடைய தங்களை 50 சதவீதம் நம்பினால் மீது 50 சதவீதம் இளையராஜாவையே நம்புவார்கள். ராஜாவின் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வெற்றி பெற செய்துவிடும் என உறுதியாக நம்பினார்கள்.
அதை இளையராஜா நிரூபித்தும் காட்டினார். நாம் படத்தை எடுத்துவிட்டோம். மிச்சத்தை ராஜா பார்த்துக்கொள்வார் என பெரிய இயக்குனர்களே நினைத்தார்கள். அந்த அளவுக்கு இளையராஜாவும் அர்ப்பணிப்போடு இசையை கொடுத்தார். இயக்குனர் ஒரு காட்சியில் சொல்ல வரும் உணர்வுகளை ராஜா தனது பின்னணி இசை மூலமே கடத்திவிடுவார்.
பல மொக்கை படங்களும் அவரின் இசையால் ஓடியிருக்கிறது. அன்னக்கிளி படத்தில் துவங்கிய அவரின் இசைப்பயணம் இப்போதுவரை நிற்கவில்லை. அவருக்கு பின் ஏ.ஆர்.ரஹ்மான் , தேவா உள்ளிட்ட பல இசையமைப்பாளர்கள் வந்தாலும் யாராலும் ராஜாவின் இடத்தை பிடிக்க முடியவில்லை. பிடிக்கவும் முடியாது.
83 வயதாகிவிட்டாலும் படங்களுக்கு இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது, சிம்பொனி இசையமைப்பது என பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இசையில் அவர் செய்த சாதனையை இதுவாரை யாரும் செய்தது இல்லை என்றே சொல்ல வேண்டும்.
நாசர் எழுதி இயக்கி 1995ம் வருடம் வெளிவந்த திரைப்படம்தான் அவதாரம். இந்த படம் உருவாகும்போது இளையராஜா போட்ட ஒரு டியூன் நாசருக்கு பிடிக்கவே இல்லை. ‘சார் இது வேண்டாம் மாத்துங்க’ என சொல்ல, இளையராஜா சிரித்துக்கொண்டே நீ கொஞ்ச நேரம் கழிச்சி வா என சொல்லியிருக்கிறார். அவர் வந்தபின் பாடலை இசையோடு கேட்டபோது மெய்சிலிர்த்துவிட்டாராம். அந்த பாடல்தான் ‘தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல’ பாடல்.
இந்த படத்தில் கண்பார்வையற்ற வேடத்தில் நாசருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். வில்லனாக மறைந்த நடிகர் பாலாசிங் நடித்திருந்தார். கூத்து தொழிலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் நாசர். ஆனால், இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை. எனவே, தயாரிப்பாளருக்கு 50 லட்சம் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இளையராஜாவின் பாடல்களை ஒரு ஆடியோ நிறுவனத்திடம் விற்றவகையில் ஒரு கோடியே 50 லட்சம் லாபம் கிடைத்ததாம். இப்படி பல படங்கள் நஷ்டமாகி இளையராஜாவின் இசையால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைத்திருக்கிறது.