RAMBO படத்தில் வேலை செய்த கமல்ஹாசன்!.. அப்பவே ஹாலிவுட்டுக்கு போயிட்டாரே!...

Kamal Haasan
Kamalhaasan: 4 வயது முதல் சினிமாவில் நடித்து வருபவர் கமல்ஹாசன். அதன்பின் அரும்பு மீசை முளைக்கும் வயதில் சினிமாவில் நடன இயக்குனராக பணிபுரிந்தார். அதன்பின் பாலச்சந்தரின் அறிமுகம் கிடைத்து அவரின் படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கினார். கமல்ஹாசனுக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை கொடுத்து அவரை மெருகேற்றினார் பாலச்சந்தர்.
ஒருபக்கம் மற்ற இயக்குனர்களின் படங்களிலும் நடித்தும் தன்னை மெருகேற்றிக்கொண்டார் கமல். சிறந்த இயக்குனர்களுடன் வேலை செய்ததால் நல்ல கதைகள், வித்தியாசமான தோற்றங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு உண்டானது. அதனால்தான், பக்கா கமர்ஷியல் ஹீரோவாக நடித்து கொண்டிருந்தபோதே பாலுமகேந்திரா இயக்கத்தில் மூன்றாம் பிறை படத்தில் நடித்தார்.
100வது படமாக ஒரு கமர்ஷியல் கதையை தேர்ந்தெடுக்காமல் ராஜபார்வை படத்தில் நடித்தார். கமலுக்கு வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எப்போதும் உண்டு. அதிலும், விதவிதமான மேக்கப்புகளை போட்டு தனது முகத்தை மறைத்துக்கொண்டு நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் எப்போதும் கமலுக்கு உண்டு.
அதனால்தான் நாயகன், அன்பே சிவம், தசாவதாரம், குணா போன்ற படங்களில் அந்த மாதிரி முயற்சிகளை செய்து பார்த்தார். ஹாலிவுட்டில் பயன்படுத்தப்பட்டு வந்த பிராஸ்தட்டிக் மேக்கப்பை தமிழ் சினிமாவில் முதன் முதலில் அறிமுகம் செய்ததே கமல்தான். மிகவும் சின்ன வயதிலேயே வயதானவர் போல நடித்திருந்தார். இந்தியன், ஹே ராம், தசாவதாரம், அவ்வை சண்முகி போன்ற படங்களில் பிராஸ்தட்டிக் மேக்கப்பை போட்டு அசத்தலாக நடித்திருந்தார். அவருக்கு பின் சில நடிகர்களுக்கு பிராஸ்தட்டிக் மேக்கப் போடும் கலைஞர்களை பரிந்துரை செய்ததும் கமல்தான். இந்த மேக்கப் கலையை அமெரிக்காவை சேர்ந்த மைக்கேல் வெஸ்ட் மோர் என்பவரிடம் கமல் கற்றுக்கொண்டார்.
கமல் மட்டும் ஹாலிவுட்டில் இருந்திருந்தால் உலகம் போற்றும் ஒரு மாபெரும் நடிகராக இருந்திருப்பார் என பலரும் சொல்வதுண்டு. ஆனால் உண்மையிலேயே அவர் ஹாலிவுட்டில் வேலை செய்திருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாது. 1988ம் வருடம் சில்வஸ்டர் ஸ்டோலன் நடித்து வெளியான RAMBO III மற்றும் 1996ம் வருடம் ரிலீஸான STAR TREK First Contact ஆகிய 2 படங்களில் மேக்கப் உதவியாளராக கமல் புணிந்திருக்கிறார். இப்போது AI தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதற்காக அமெரிக்க சென்றிருக்கிறார்.
அதை கற்றுக்கொண்டு வந்து என்னவெல்லாம் செய்யப்போகிறார் என்கிற ஆர்வம் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.