ஃபாரினில் எடுக்க பிளான் போட்டு எல்லாம் மாறிப்போச்சே!.. இப்பவரைக்கும் இளையராஜாவின் கல்ட் கிளாசிக்!..

Published on: March 18, 2025
---Advertisement---

Sathya movie: திரைப்படங்களில் பாடல்களை எடுப்பதில் பல விதம் இருக்கிறது. கருப்பு வெள்ளையில் சினிமாக்கள் உருவான காலத்தில் எல்லா பாடல்களும் செட்டில்தான் எடுப்பார்கள். பாடல் என்ன, முழுப்படத்தையே செட்டில் எடுப்பார்கள். பராசக்தி படத்தில் வரும் எல்லா காட்சிகளுமே செட்டில் எடுக்கப்பட்டுதுதான்.

1930,40 காலங்களில் ஒரு படத்தில் 30 பாடல்களெல்லாம் இருக்கும். அதையும் அப்போது மக்கள் ரசித்தார்கள். ஏனெனில், சினிமா, கூத்து, நாடகத்தை தவிர மக்களுக்கு அப்போது வேறு பொழுதுபோக்கு இருந்தது இல்லை. காலம் போக போக பாடல்களின் எண்ணிக்கை குறைந்தது. 80களில் ஒரு படத்தில் 10க்கும் குறைவான பாடல்கள் இடம் பெற்றிருந்தது. 90களில் 4 அல்லது 5ஆக குறைந்தது. சில படங்களில் வெறும் 2 பாடல்கள் மட்டுமே இருந்தது. விஜயகாந்தின் 100வது படமான கேப்டன் பிரபாகரனில் இருந்தது 2 பாடல்கள்தான்.

ஸ்டுடியோவில் மட்டுமே பாடல்கள் எடுக்கப்பட்டிருந்தபோது பாரதிராஜா கிராமத்திற்கு சென்று வாய்க்கால், வரப்பு மற்றும் சோளக்காடுகளில் நடிகரக்ளை ஓடவிட்டு பாடல்களை எடுத்தார். அதனால்தான் பதினாறு வயதினிலே படம் வந்தபின் ஸ்டுடியோவுக்குள் படமெடுக்கும் எண்ணிக்கை குறைந்தது.

70,80களில் சில இயக்குனர்கள் வெளிநாடுகளுக்கு சென்று பாடல்களை எடுத்தார்கள். அதுகூட, கதைக்களம் அந்த நாட்டில் நடப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். ஆனால், ஷங்கர் போன்ற இயக்குனர்கள் வந்தபின் வெளிநாட்டில் உள்ள பல அழகான, கண்ணை கவரும் இடங்களில் பாடல் காட்சிகளை எடுத்தார். ஜீன்ஸ் படத்தில் வந்த ‘ஹைரோப்பா’ பாடலை உலகில் உள்ள 8 அதிசயங்களிலும் எடுத்து அசத்தினார்.

அதன்பின் பல இயக்குனர்களும் வெளிநாடுகளுக்கு சென்று பாடல் காட்சிகளை எடுக்க துவங்கிவிட்டார்கள். சென்னையில் கதாநாயகியை பார்த்து ஹீரோ சிரிப்பார். கட் செய்தால் ஆஸ்திரேலியாவில் இருவரும் டூயட் பாடிகொண்டிருப்பார்கள். இது ரசிகர்களுக்கும் பழகிவிட்டது. தயாரிப்பாளர்கள் செலவில் ஹீரோ வெளிநாட்டை பார்க்க ஆசைப்பட்டால் ‘இந்த பாடலை ஃபாரினில் வையுங்கள்’ என இயக்குனரிடம் சொல்லிவிடுவார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல், அமலா உள்ளிட்ட பலரும் நடித்து 1988ம் வருடம் வெளிவந்த திரைப்படம் சத்யா. இந்த படத்திற்காக ‘வளையோசை கலகலவென கவிதைகள் படிக்குது’ என்கிற சூப்பர் மெலடி பாடலை இசையமைத்தார் இளையராஜா. இந்த பாடலை வெளிநாட்டில் எடுக்கலாம் என ஆசைப்பட்டார் கமல். அவர்தான் அந்த படத்திற்கு தயாரிப்பாளரும் கூட.

ஆனால், ‘இந்த படத்தின் ஹீரோ ஒரு மிடிஸ் கிளாஸ் வகுப்பை சேர்ந்தவன். அதனால் அவன் போற பஸ், பார்க், பீச் போன்ற இடங்களில் படமாக்கினால்தான் சரியாக இருக்கும்’ என சொன்னார் சுரேஷ் கிருஷ்ணா. ஷோலே படத்தின் கேமராமேன் எஸ்.எம்.அன்வர் பேருந்தில் ரோப் கட்டிக்கொண்டு பாடலை படமாக்கினார். அந்த பாடல் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுத்தது. மேலும், இப்போது வரை கோலிவுட்டின் கல்ட் கிளாசிக் பாடலாக வளையோசை இருக்கிறது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment