வாய்ப்பு கேட்ட போனவர் பெயரை வைத்து பாட்டு எழுதிய டி.ஆர்!.. அட நம்ம சிம்பு பாட்டு!...

T Rajendar: தமிழ் திரையுலகில் சகலகலா வல்லவனாக வலம் வந்தவர் டி.ராஜேந்தர். தன்னம்பிக்கையின் உச்சம் என இவரை சொல்லலாம். கல்லூரியில் படிக்கும்போதே டேபிளில் தாளம் தட்டி பாட்டு பாடுவார். அதனாலேயே இவரை சுற்றி நண்பர்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். நல்ல தமிழ் புலமை கொண்டவர் என்பதால் வார்த்தைகள் இவருக்கு அருவி போல கொட்டும்.
இவர் முதலில் இயக்கிய ஒரு தலை ராகம் படமே சூப்பர் ஹிட். இத்தனைக்கும் அறிமுக இயக்குனர் என்றால் படம் வியாபாரம் ஆகாது என்பதற்காக இயக்குனர் என இவரின் பெயரை டைட்டில் போட்டிருக்க மாட்டார்கள். படம் தியேட்டரில் வெளியாகி 2 வாரங்கள் கழித்துதான் கூட்டம் வர துவங்கியது. இப்படித்தான் சினிமாவில் நுழைந்தார் டி.ராஜேந்தர்.
அதன்பின் உறவை காத்த கிளி, மைதிலி என்னை காதலி, என் தங்கை கல்யாணி, ஒரு தாயின் சம்பதம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களையும் இயக்கி நடித்தார். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், கலை, இசை, எடிட்டிங், ஒளிப்பதிவு, தயாரிப்பு என பல வேலைகளையும் பார்த்தவர் இவர் மட்டுமே.
இவரின் படங்களும், பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட் அடித்தது. ரஜினி படம் வெளியாகும்போது டி.ஆர். படம் வெளியானால் டி.ஆரை தொடார்பு கொண்டு ‘உங்கள் படத்தின் ரிலீஸை தள்ளி வைக்க முடியுமா?’ என ரஜினியே கேட்ட சம்பவங்களெல்லாம் நடந்திருக்கிறது.
மகன் சிம்பு சிறுவனாக இருக்கும்போதே சினிமாவில் அறிமுகம் செய்து வைத்து அவரை ஒரு நடிகராக மாற்றிவிட்டார். சிம்பு இப்போது முன்னணி நடிகர்களின் வரிசையில் இருக்கிறார். டி.ஆர். படம் இயக்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஊடகங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளில் மிகவும் தடாலாடியாக பேசுவார். இவர் பேசிய வீடியோக்கள் எல்லாமே இணையத்தில் வைரல்தான்.
இந்நிலையில்தான், நடிகர் காதல் சுகுமார் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். காதல் அழிவதில்லை படம் உருவாகி கொண்டிருந்த நேரத்தில் டி.ஆர். சார் ஆபிசுக்கு போனேன். அந்த படத்தில் வரும் ஒரு காதல் பாடலுக்கு முதல் வரி அமையவில்லை என சொல்லிக்கொண்டிருந்தார். நான் உடனே ‘என் பெயரை வச்சி எழுதுங்க சார்’ என் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன். ஆனா, அவர் உண்மையாவே என் பெயரை வச்சி பாட்டை எழுதிட்டாரு. அதுதான் அந்த படத்தில் வரும் ‘மாரா மாரா சுகுமாரா’ என சொல்லியிருக்கிறார்.