Connect with us
சிவாஜி

Cinema History

மனோகரா படத்திற்கு சிவாஜி தான் நாயகன்… அண்ணாவின் திடீர் முடிவு… கடுப்பான தயாரிப்பாளர்…

தமிழ் சினிமாவின் முக்கிய படங்களில் ஒன்றாக இருக்கும் மனோகரா படத்தில் சிவாஜி ஒப்பந்தமானது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் புகழ்பெற்ற நாடகங்களே சினிமாவாக இயக்கப்படும். அப்படி வெளிவந்த படங்கள் தான் பல நாள் ஓடி வெற்றியும் பெறும். அதில் ஒன்று தான் பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய ‘மனோகரா’. இந்த நாடகத்தினை முதலில் 1936-ம் ஆண்டே சினிமாவாக எடுத்திருந்தனர். அதில் நாயகனாக பம்மல் சம்பந்த முதலியாரே நடித்திருந்தார். ஆனால் அந்த படக்கதையை நாடகமாக போடும் வழக்கம் மட்டும் மாறவில்லை.

அப்பொழுது பிரபலமா இருந்த கே.ஆர்.ராமசாமி துவங்கி சினிமாவில் அறிமுகமாகி இருந்த சிவாஜி கணேசன் வரை அனைவரும் அந்த நாடகத்தில் ‘மனோகரனாக’ நடித்திருக்கின்றனர். அதிலும், சிவாஜியைப் பொறுத்தவரையில் ‘மனோகரா’ நாடகத்தில் அவர் ஏற்காத வேடமே இல்லை.

இத்துணை புகழ்பெற்ற நாடகத்தை இரண்டாவது முறையாக திரைப்படமாக்க ஜுபிடர் பிக்சர்ஸ் சோமு முடிவெடுத்திருக்கிறார். ஆனால், அவர் கே.ஆர்.ராமசாமியை கதாநாயகனாக நடிக்க வைக்க முடிவெடுத்திருக்கிறார். படத்தினை ஏ.எஸ்.ஏ.சாமி இயக்குவதாகவும் திட்டமிடப்பட்டது. சில காரணங்களால் படத்தில் வசனம் எழுதும் பொறுப்பு மு.கருணாநிதிக்கு கை மாறியது.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆரின் மக்கள் பலத்தை அன்றே கணித்தவர் நடிகர் சோ…! காரணமாக இருந்தவர் கருணாநிதி….

இதில், கே.ஆர்.ராமசாமியை நடிக்க கால்ஷீட் குறித்து கேட்க சோமு அவரிடம் சென்று இருக்கிறார். ஆனால், அரசியல் ரீதியாக கருணாநிதிக்கும், ராமசாமிக்கும் பிரச்சனை இருந்து இருக்கிறது. அதனால், அவர் வசனம் எழுதும் படத்தில் தான் நடிக்க முடியாது என திட்டவட்டமாக சொல்லிவிட்டாராம். இது சோமுவினை வெகுவாக அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அவர் சம்பளத்தினை இரண்டு மடங்காக தருவதாக கூறியும், முடியவே முடியாது என மறுத்துவிட்டாராம். அப்பொழுது செல்வாக்காக இருந்த நடிகர் என்பதால் அவர் இல்லாமல் படம் எடுத்தால் படத்தின் வசூல் வெகுவாக அடிப்படுமே என வருத்தத்தில் ஆழ்ந்து இருக்கிறார்.

மனோகரா

இந்த பிரச்சனையை அண்ணாவிடம் கொண்டு செல்ல முடிவெடுத்து இருக்கிறார். அவர் சொன்னால் ராமசாமி கேட்பார் என்பது இவரின் எண்ணம். ஆனால், அவரோ பராசக்தி படம் வெளிவரும் வரை இந்த பிரச்சனையை ஆறப்போடுங்கள். மனோகரனாக சிவாஜி நடித்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன் எனக் கூறினாராம்.

தயாரிப்பாளருக்கோ பெரும் கடுப்பானதாம். இவர் சொன்னால் ராமசாமி இப்படத்தில் கண்டிப்பாக நடிப்பார் என்று பார்த்தால் அறிமுக நாயகனை நடிக்க வைக்க சொல்கிறாரே என யோசித்தாராம். ஆனாலும், அண்ணா பேச்சினை சோமுவால் தட்டமுடியவில்லை. பராசக்தி படத்தினை முதல் நாளே தியேட்டர் சென்று பார்த்து இருக்கிறார். அதில் சிவாஜியின் நடிப்பு இவரை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

உடனே, அண்ணாவிடம் தனக்கு சிவாஜி நடிப்பதில் சம்மதம் எனக் கூறினாராம். அண்ணாவோ கணேசன் நம் பையன், அவனை நாம் தானே பார்த்துக்கொள்ள வேண்டும். அதுதான் அவனை இப்படத்திற்காக சிபாரிசு செய்தேன். இருந்தும் இது அவனின் நடிப்புக்கான வாய்ப்பு தான் எனக் கூறினாராம். தொடர்ந்து சிவாஜி மனோகரா படத்தின் நாயகனாக புக் செய்யப்பட்டு இருக்கிறார். எல்.வி.பிரசாத் இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி நடிப்பில் இன்றும் அப்படம் பலரின் புல்லரிப்பிற்கு காரணம் என்றால் மிகையாகாது தானே!

google news
Continue Reading

More in Cinema History

To Top