Cinema History
ஹீரோ ஜெய்சங்கர் ரஜினி படத்தில் வில்லன் ஆனது ஏன்?!.. பின்னணியில் இருக்கும் காரணம் இதுதான்!..
தென்னக “ஜேம்ஸ்பாண்ட்” என்ற செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்பட்டவர் ஜெய்சங்கர். துப்பறியும், திரில்லர் கதைகளில் அதிகமாக நடித்த இவர், குடும்பப்பாங்கான கதைகளிலும் நடித்து இருக்கின்றார்.
துரு துரு இளைஞனாக காதல் காட்சிகளில் நவரசம் சொட்டும் நடிப்பு, ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம், அதிரடி. இப்படி நடிப்பில் தனித்துவம் பதித்து வந்த ஜெய்சங்கர், ரஜினிகாந்த் படத்தில் வில்லனாகவும் நடித்துள்ளார்.
ரஜினி நடித்து மிகப்பெரிய வெற்றியடைந்த “முரட்டுக்காளை” படம் ரசிகர்களை கவர்ந்தது அந்நாட்களில். அண்ணன் – தம்பிகள் பாசத்தை முன்வைத்து வந்த இந்த படத்தில் ரதி கதாநாயகியாக நடித்திருந்தார். நகைச்சுவைக்கு ஒய்.ஜி.மகேந்திரன், பாடல்கள் எல்லாம் கேட்கும் படியாக என ஒவ்வொரு அம்சத்திலும் சிறந்து விளங்கியது இப்படம்.
“பொதுவாக என் மனசு தங்கம்” என மலேசியா வாசுதேவன் குரலில் வந்த பாடல் இன்றும் திருவிழா நேரங்களில் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது. ரஜினியுடைய தோற்றமும் முழுக்க, முழுக்க கிராமத்திலேயே படமாக்காப்பட்ட காட்சிகள் என ரஜினியின் சினிமா சரித்திரத்தில் முத்திரை பதித்த படங்களில் இதுவும் ஒன்று.
இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பார் ஜெய்சங்கர். கதாநாயகனாக வலம் வந்தவரை எப்படி திடீரென வில்லனாக்குவது என யோசிக்க, அவரிடம் மேலும் இதனை அவரிடம் எப்படி கேட்பது என தயக்கமும் இருந்ததாம். தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் ஜெய்சங்கரிடம் கதை குறித்தும், கதாபத்திரத்தின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துக்கூறி அவரின் சம்மதத்தை பெற்றனர். நீங்கள் பெரிய நிறுவனம். எனக்கு கெடுதல் செய்ய மாட்டீர்கள். நான் நடிக்கிறேன் என சம்மதம் சொன்னார் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் நடிக்க ஒப்புகொண்டதை கேட்டு ரஜினியே ஆச்சர்யப்பட்டிருக்கிறார்.
ரஜினி படம் என்பதனாலேயே படத்தின் எதிர்பார்ப்பு எகிறத்துவங்கியது துவக்கத்திலேயே. ஜெய்சங்கர் தனது மாறுபட்ட நடிப்பின் மூலம் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தவும் தவறவில்லை. இந்த படத்தில் மெருகேறிய விதமாக இருந்தது அவரது வில்லத்தனம்
ரஜினியும், இவரும் மோதிக்கொள்ளும் காட்சிகளில் திரையரங்குகளில் “விசில்” சத்தம் காதுகளை கிழித்தனவாம். அதன்பின் பல வருடங்கள் வில்லனாக நடித்தார் ஜெய்சங்கர். ரஜினியின் “படிக்காதவன்”, ‘தளபதி”, “அருணாச்சலம்” படங்களில் முக்கிய வேடத்தினை ஏற்று நடித்திருந்தார் ஜெய்சங்கர்.