“கமல் படம் மாதிரியே இல்ல, தேறாது”… அதிர்ச்சியடைந்த ஏவிஎம்... சர்ப்ரைஸ் கொடுத்த ரசிகர்கள்…
1982 ஆம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, துளசி, ரவீந்திரன், விகே ராமசாமி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “சகலகலா வல்லவன்”. இத்திரைப்படத்தை இயக்கியவர் எஸ் பி முத்துராமன். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை செய்தது.
இளையராஜா இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியது. குறிப்பாக இதில் இடம்பெற்ற “இளமை இதோ இதோ” என்ற பாடல் இன்றும் கூட புத்தாண்டு விழாக்களில் ஒலிபரப்பப்படுகிறது.
“சகலகலா வல்லவன்” திரைப்படத்தின் கதையை எழுதியவர் பஞ்சு அருணாச்சலம். கமல்ஹாசன் அனைத்து கலைகளிலும் சிறந்த வல்லவர் என்பதை நிரூபிப்பதற்காகவே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டதாம். ஆதலால்தான் இத்திரைப்படத்திற்கு “சகலகலா வல்லவன்” என பெயர் வைத்தார்களாம்.
இத்திரைப்படம் வெளிவந்தபோது நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. குறிப்பாக ஆனந்த விகடன் பத்திரிக்கை இத்திரைப்படத்திற்கு 100க்கு 42 மார்க்குகளை கொடுத்திருக்கிறது. இதில் மற்றொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் “சகலகலா வல்லவன்” திரைப்படத்திற்கு போட்டியாக ரஜினிகாந்த்தின் “எங்கேயோ கேட்ட குரல்” திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படத்தையும் எஸ் பி முத்துராமன்தான் இயக்கியிருந்தார். எனினும் “சகலகலா வல்லவன்” திரைப்படம்தான் மாபெரும் வெற்றி பெற்றது.
ஆனால் இந்த மாபெரும் வெற்றித்திரைப்படத்தை, திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பு ப்ரிவ்யூ காட்சியை பார்த்தவர்கள், இத்திரைப்படத்தை சுமார் என்று கூறினார்களாம். இது குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன்,
“சகலகலா வல்லவன் திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமைந்தது. குறிப்பாக ‘ஏ’ சென்டரில் மட்டும் வெற்றிநாயகனாக திகழ்ந்த கமல், இத்திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு ‘பி’ ‘சி’ சென்டர்களிலும் வெற்றி நாயகனாக திகழ்ந்தார். இத்திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னால், ஏவிஎம் நிறுவனம், அவர்களுடைய நண்பர்கள், வங்கி அதிகாரிகள் ஆகியோருக்காக சிறப்பு காட்சி அமைத்திருந்தார்கள். அப்போது படத்தை பார்த்த அவர்கள் ‘சிகப்பு ரோஜாக்கள் போன்ற நல்ல திரைப்படங்களில் நடித்து வந்த கமல், இது போன்ற மசாலா படத்தில் நடிப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை’ என கூறினார்கள். அதை கேட்ட ஏவிஎம் நிறுவனத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் திரையரங்கில் அத்திரைப்படம் வெளியான பின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரும் வெற்றித்திரைப்படமாகவும் இத்திரைப்படம் அமைந்தது” என இத்தகவலை பகிர்ந்துகொண்டார்.
ஒரு திரைப்படம் சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காமல் போகும். ஆனால் பெருவாரியான ரசிகர்களை ஒரு திரைப்படம் திருப்திபடுத்தினாலே போதும், அத்திரைப்படம் மாபெரும் வெற்றித்திரைப்படமாக அமையும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக “சகலகலா வல்லவன்” திகழ்ந்திருக்கிறது.