ரஜினி படத்துக்கு வந்த சிக்கல்… பண உதவி செய்து நெகிழ வைத்த கமல்… நட்புன்னா இப்படில இருக்கனும்!!
1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாஃபட் ஜெயலட்சுமி ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “முள்ளும் மலரும்”. சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பேட்டியில் “உங்கள் வாழ்க்கையில் மிகவும் பிடித்த திரைப்படம் எது?” என பாலச்சந்தர் ரஜினிகாந்திடம் கேட்டார். அதற்கு ரஜினிகாந்த் கூறிய திரைப்படம் “முள்ளும் மலரும்’.
ரஜினிகாந்த் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது அவரது ஸ்டைல்தான். ஆனால் ரஜினிகாந்த் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்த திரைப்படம்தான் “முள்ளும் மலரும்”. காளி என்ற கதாப்பாத்திரத்தில் சோகம், மகிழ்ச்சி என அனைத்து உணர்வுகளையும் கலந்த ஒரு யதார்த்த மனிதனாகவே அத்திரைப்படத்தில் வாழ்ந்திருப்பார் ரஜினிகாந்த்.
“முள்ளும் மலரும்” திரைப்படத்தை இயக்கியவர் மகேந்திரன். தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் மகேந்திரனும் ஒருவர். தனது திரைப்படங்களில் யதார்த்த மனிதர்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியவர். இந்த நிலையில் “முள்ளும் மலரும்” திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பார்க்கலாம்.
“முள்ளும் மலரும்” திரைப்படத்தின் 75% படப்பிடிப்பு முடிவடைந்தபின், தயாரிப்பு நிறுவனத்தார் அத்திரைப்படத்தை போட்டுப் பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு திரைப்படத்தின் சில காட்சிகள் பிடிக்கவில்லையாம். மேலும் மீதி படப்பிடிப்பிற்கான பணத்தையும் தர மறுத்திருக்கிறார்கள். இதனால் மகேந்திரன் மிகவும் சோர்ந்துபோனார்.
இத்தகவலை கேள்விபட்ட கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனத்தாரிடம் பேசிப்பார்த்திருக்கிறார். ஆனால் தயாரிப்பு நிறுவனம் எதற்கும் ஒத்துவரவில்லை. இதனால் கமல்ஹாசன் தன்னுடைய பணத்தை மகேந்திரனிடம் கொடுத்து மீதி திரைப்படத்தை முடிக்கச்சொல்லியிருக்கிறார். கமல்ஹாசன் செய்த உதவியால்தான் இத்திரைப்படம் முடிவடைந்து வெளிவந்திருக்கிறது.
ரஜினிகாந்த்துடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்தவர் கமல்ஹாசன். சில காலகட்டத்திற்கு பிறகு போட்டி நடிகர்களாகவே இருவரும் மாறிப்போயினர். அப்படி இருந்தும் கமல்ஹாசன், ரஜினி நடித்த திரைப்படத்திற்கு பண உதவி செய்திருக்கிறார் என்றால் அவர்கள் இருவரின் நட்பும் எவ்வளவு சிறப்பானதாக இருந்திருக்கிறது என்பதைத்தான் வெளிக்காட்டுகிறது.