வெற்றிமாறனுக்கு சப்போர்ட்டுக்கு வந்த உலகநாயகன்… மீண்டும் கிளம்பிய சர்ச்சை
தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வரும் வெற்றிமாறன் தற்போது “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் சூரி கதாநாயகராக நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்திலும் நடித்து வருகிறார். இத்திரைப்படம் கடந்த இரண்டு வருடங்களாக எடுக்கப்பட்டு வருகிறது. ஆதலால் இத்திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்ட வெற்றிமாறன் “திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுகிறார்கள். ராஜராஜ சோழனை இந்து என்பது போல் திரிக்கிறார்கள்” என கூறியிருந்தார். இவர் கூறிய இந்த வார்த்தைகள் இணையத்தில் தீயாக பரவியது. இதைத்தொடர்ந்து, வெற்றிமாறன் கருத்து பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் வெற்றிமாறனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெற்றிமாறன் “அசுரன்” திரைப்படத்தை இயக்கியபோதே ஒரு குறிப்பிட்ட பிரிவினர் அத்திரைப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தற்போது வெற்றிமாறன் இவ்வாறு பேசியது இணையத்தில் பெரும் விவாதங்களை கிளப்பியது.
இந்த நிலையில் நேற்று “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்காக பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றிற்கு கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்தார். அதில் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை குறித்து பேசியபோது, நிருபர் ஒருவர் “ராஜராஜ சோழனை இந்து மத மன்னராக சித்தரிக்கிறார்கள் என வெற்றிமாறன் பேசியுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன?” என கேட்டார்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன் “இந்து மதம் என்கிற பெயர் ராஜராஜச்சோழன் காலத்தில் கிடையாது. வைணவம், சைவம் என்றுதான் இருந்தது. ஆங்கிலேயர்கள்தான் இந்து என்ற பெயரை நமக்கு வைத்தனர். தூத்துக்குடியை தூத்துகுரின் என்று சொல்லத்தெரியாமல் சொன்னது போல்தான் ஆங்கிலேயர்கள் பெயர் வைத்தார்கள்” என கூறினார்.
மேலும் “இங்கு மதங்கள் வெவ்வேறு இருந்தது. 8 ஆம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஒன்று சேர்த்தார். இது எல்லாம் வரலாறு. இந்த வரலாறெல்லாம் நாம் இங்கு பேசமுடியாது. “ எனவும் கூறினார்.
கமல்ஹாசனின் இந்த பேச்சு இணையத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பலரும் வெற்றிமாறன் மற்றும் கமல்ஹாசனின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சிலர் அவர்களின் கருத்துக்களை எதிர்த்து களமாடிவருகிறார்கள்.
“தசாவதாரம்” திரைப்படத்தில் சைவம், வைணவம் ஆகிய பிரிவுகளுக்கு இடையே இருந்த சண்டை குறித்து சில காட்சிகள் இடம்பெற்றன. அத்திரைப்படம் வெளிவந்தபோதே பல எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போது கமல்ஹாசன் மீண்டும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளது இணையத்தில் விவாதங்களை கிளப்பிவருகிறது.
எனினும் சிந்து நதிக்கு அப்பால் உள்ளவர்களை சிந்துக்கள் என்று அழைத்து வந்த வெளிநாட்டினர் அதன் பின் அதுவே மருவி இந்துக்கள் என ஆனதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.