Cinema History
ரஜினியை ஒதுக்கிய திரையுலகம்.. கைகொடுத்து தூக்கிவிட்ட கண்ணதாசன்!.. இவ்வளவு நடந்திருக்கா?!..
Rajinikanth: சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பது போராட்டம் எனில் அதை தக்க வைத்து கொள்வதற்கு அதைவிட அதிகமாக போராட வேண்டும். சினிமாவில் துங்கும்போதும் காலை ஆட்டிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையேல் அடக்கம் செய்து விடுவார்கள். ஏனெனில், அவ்வளவு போட்டி,பொறாமைகளை கொண்டது திரையுலகம்.
அங்கே யாரையும் வளர விடமாட்டார்கள். அப்படி அதையும் மீறி ஒருவன் வளர்ந்துவிட்டால் அவன் எங்கேயாவது சறுக்கினால் அதை வைத்து கட்டம் கட்டி இல்லாததையும், பொல்லாததையும் சொல்லி காலி செய்ய பார்ப்பார்கள். சினிமாவில் பெரிய ஆளுமையாக இருந்த எம்.ஜி.ஆரே கழுத்தில் குண்டடி பட்டபோது அவரால் பேச முடியாது. இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என கொளுத்தி போட்டனர். ரஜினியும் இதில் தப்பவில்லை.
அபூர்வ ராகங்கள் படம் மூலம் அறிமுகமாகி மெல்ல மெல்ல உயர்ந்து பைரவி எனும் படத்தில் ஹீரோவாக நடித்து ஒரு கட்டத்தில் சூப்பர்ஸ்டாராகவும் மாறியவர் நடிகர் ரஜினி. கடந்த 40 வருடங்களாக சினிமாவில் யாருக்கும் தனது இடத்தை விட்டுக்கொடுக்காமல் இருக்கும் நடிகர் இவர். இதற்கு இவர் கடந்து வந்த பாதை சாதாரணமானது அல்ல. திரைவாழ்வில் பல பிரச்சனைகள், துரோகங்கள், போட்டி பொறாமைகளை பார்த்துதான் வந்திருக்கிறார்.
பிரியா எனும் படத்தில் நடித்த சமயம் ரஜினி பல பிரச்சனைகளை சந்தித்தார். நடிகை லதாவை அவர் காதலித்தார் எனவும் இராமபுரம் தோட்டத்தில் வைத்து எம்.ஜி.ஆர் அவரை அடித்தார் என்றும் செய்திகளை பரப்பினார்கள். ஒரு பத்திரிக்கையாளர் ‘என்னை ரஜினி கார் ஏற்றி கொலை செய்ய பார்த்தார்’ என காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ரஜினி கைது செய்யப்பட்டு பின் விடுதலை ஆனார்.
ஒரு படப்பிடிப்புக்காக ஹைதராபாத் சென்ற ரஜினியை ஆந்திரா போலீஸ் கைது செய்து பின்னர் ரஜினி விடுதலை ஆனார். பிரியா படம் வெளியாகி சூப்பர் ஹிட். ஆனால், அப்போது ரஜினி மனநல மருத்துவமனையில் இருந்தார். எனவே, ரஜினிக்கு பைத்தியம் பிடித்துவிட்டது. இனிமேல் சினிமாவில் நடிக்க மாட்டார் என அவரை பிடிக்காதவர்கள் கதை கட்டிவிட்டனர். எனவே, ரஜினியை வைத்து படமெடுக்க தயாரிப்பாளர்கள் தயங்கினார்கள்.
அப்போதுதான் தயாரிப்பாளர் பாலாஜி ரஜினியை வைத்து பில்லா படத்தை எடுக்க முன்வந்தார். அவரிடம் பலரும் ‘இது தவறான முடிவு. ரஜினியை வச்சி படம் எடுக்க வேண்டாம்’ என கூறினார். ஆனாலும், அவர் உறுதியாக இருந்தார். படம் பாதி எடுக்கப்பட்ட பின்னர் மீண்டும் அவரிடம் பலரும் ‘ரஜினி படம் இனிமேல் ஓடுமா என தெரியவில்லை. படமே ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?’ என பயமுறுத்த பாலாஜியே கொஞ்சம் பயந்துள்ளார்.
எனவே, அந்த படத்தில் பாடல்களை எழுதும் கவிஞர் கண்ணதாசனிடம் சென்று இதுபற்றி பேசினார். கண்ணதாசனோ ‘நீங்கள் எந்த கவலையும் பட வேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன்’ என சொல்லிவிட்டு, அந்த படத்தில் 2வது ரஜினி அறிமுகம் பாடலில் ரஜினியை பற்றி பேசியவர்களுக்கு ரஜினியே பதில் சொல்வது போல வரிகளை எழுதினார்.
‘நாட்டுக்குள்ள எனக்கொரு ஊர் உண்டு.. உருக்குள்ள எனக்கொரு பேர் உண்டு. என்னை பத்தி ஆயிரம் பேரு என்னென்ன சொன்னாங்க இப்பென்ன செய்வாங்க’ என பல்லவி எழுதினார். மேலும், நாலு படி மேலே போனா நல்லவன விடமாட்டாங்க… பாடுபட்டு பேரை சேர்த்தா பல கதைகள் சொல்வாங்க.. யாரு சொல்லி இப்ப என்ன.. நான் இப்ப நல்லா இருக்கேன்’ என கண்ணதாசன் எழுதியிருந்தார்.
ரஜினி முதன் முதலில் தன்னை பற்றி தானே பாட்டு பாடி நடித்தது இந்த பாட்டில்தான். அதன்பின் பல படங்களில் அவர் ஓப்பனிங் சாங் என அப்படி நடித்தாலும் ரஜினியின் முதல் ஓப்பனிங் சாங் இந்த பாடல்தான் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 21 வருஷம் கழிச்சி ஒரே ஸ்டுடியோவில் சந்தித்து கொண்ட ரஜினி – கமல்… வைரல் கிளிக்ஸ்..