சூப்பர் ஸ்டாரை வைத்து படம் இயக்க வேண்டுமா? முதலில் இவரை புக் பண்ணுங்க… கார்த்தியின் ராசியோ ராசி!!
தமிழின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் கார்த்தி, இளம்பெண்களின் கனவுக்கண்ணனாகவும் திகழ்கிறார். தனது முதல் திரைப்படத்திலேயே அசர வைக்கும் நடிப்பை வெளிப்படுத்திய கார்த்தி, அதன் பின் பல வெற்றித் திரைப்படங்களில் தனது வசீகரமான நடிப்பின் மூலம் மக்களை கவர்ந்தார்.
சமீபத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கூட வந்தியதேவனாக வந்து ரசிகர்களை தனது கலகலப்பான நடிப்பால் வசப்படுத்தினார். மேலும் வருகிற தீபாவளி அன்று இவர் நடித்த “சர்தார்” திரைப்படம் வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் சமீபத்தில் வெளிவந்தது.
இவ்வாறு தமிழின் முன்னணி நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ராசியான நடிகராகவும் கார்த்தி திகழ்கிறார். ஆம்! கார்த்தியை வைத்து இரண்டாவது படம் எடுத்த மூன்று இயக்குனர்கள் பின்னாளில் டாப் நடிகர்களை வைத்து படம் இயக்கியிருக்கிறார்கள். இது தற்செயல்தான் என்றாலும் நினைத்துப்பார்க்க வியப்பாகத்தான் இருக்கிறது.
அப்படி கார்த்தியை வைத்து இரண்டாவது திரைப்படத்தை இயக்கி, தங்களது மூன்றாவது திரைப்படத்திலேயே உச்ச நட்சத்திரங்களை இயக்கிய அந்த இயக்குனர்கள் யார் யார் என பார்க்கலாம்.
பா ரஞ்சித்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய முதல் திரைப்படம் “அட்டக்கத்தி”. அத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பா ரஞ்சித், கார்த்தியை வைத்து “மெட்ராஸ்” திரைப்படத்தை இயக்கினார். அத்திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பா ரஞ்சித்திற்கு ரஜினிகாந்தை வைத்து “கபாலி” திரைப்படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.
ஹெச் வினோத்
ஹெச் வினோத் இயக்கிய முதல் திரைப்படம் “சதுரங்க வேட்டை”. இத்திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து கார்த்தியை வைத்து “தீரன் அதிகாரம் ஒன்று” திரைப்படத்தை இயக்கினார் ஹெச் வினோத். அதன் பிறகுதான் அஜித்தை வைத்து “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது.
லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ்ஜின் முதல் திரைப்படம் “மாநகரம்”. இத்திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து கார்த்தியை வைத்து “கைதி” திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படம் லோகேஷ் கனகராஜ்ஜிற்கு திருப்புமுனையான திரைப்படமாக அமைந்தது. அதன் பின் லோகேஷ் விஜய்யை வைத்து”மாஸ்டர்” திரைப்படத்தையும் கமல்ஹாசனை வைத்து “விக்ரம்” திரைப்படத்தையும் இயக்க வாய்ப்பு கிடைத்தது.
மேற்கூறிய இயக்குனர்களின் இரண்டாவது திரைப்படங்களில் கார்த்திதான் கதாநாயகர். ஆனால் அதன் பின் அவர்களது கேரியர் தமிழின் டாப் நடிகர்களை இயக்கும் அளவுக்கு எகிறியிருக்கிறது. இது மிகவும் பிரம்மிப்பான ஒன்றாகவும் ஆச்சரியமூட்டும் ஒன்றாகவும் இருக்கிறது.